Thursday, November 13, 2014

ராஜயோக தியானம் : தொடர்பினை ஏற்படுத்துதல்


பேச்சின் ஒலிவடிவம் மற்றும் கண்களின் பார்வை போன்ற பௌதீக சக்திகளினால் இருவர் தொடர்பினை ஏற்படுத்தும்போது அதன் அடிப்படையில் இருப்பது எண்ணங்கள் மூலமான தொடர்பேயாகும். அங்கே உண்மையில் அவர்களின் எண்ணங்களின் இசைவாக்க தொடர்பாடலே நிகழ்கிறது. இதேபோன்று நாம் பரமதந்தையுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கும் எமது எண்ணங்களையே உபயோகப்படுத்துகிறோம். 

இதனாலேயே கீதையில் 'மன்மனாபவ' என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் உங்களின் மனதினை என்மீது ஒருமுகப்படுத்துங்கள் என்பதாகும்.

ஒரு பக்கம் பார்த்தால் இது மிக இலகுவானதாக தோன்றும். கடுந்தவம் மற்றும் வழிபாடுகள் என்று எமது பௌதீக உடலுக்கு எவ்வித கஷ்டங்களும் கொடுக்கவேண்டியதில்லை. நாம் செய்யவேண்டியதேல்லாமே எமது எண்ணங்களினை, மனதினை இறைவனை நோக்கித் திருப்புவதேயாகும். இத்தகைய மிக இலகுவான செயலே எமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் எமது எண்ணங்களினை எங்கே ஒருமுகப்படுத்துவது என்று எமக்குத் தெரியாது. அவற்றினை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும் தெரியாது.

இதனாலேயே தான் ஞானம் தேவைப்படுகிறது. நான் யார் என்று அறிந்து கொள்வதன் மூலம் ஆத்மாவானது எவ்வாறு எண்ணங்களை உருவாக்குகிறது என்று தெரியவருகிறது. பரமாத்மாவினைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் அவர்மீது எமது எண்ணங்களை ஒருமுகப்படுத்த முடிகிறது. ஞானத்தினையும் அன்பினையும் பெற்றுக்கொண்ட பின்னர் எமது எண்ணங்கள் மிக இயல்பாகவே பிறதிசைகளிளிருந்து விலகி பரமாத்மாவின்மீது ஒருமுகப்படுகிறது. 

ராஜயோகத்தின் ஆரம்பநிலையில் மனமானது மிகவும் தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது. இதுவே நிச்சயமாக மிகச்சிறந்த, இலகுவான, இயல்பான வழிமுறையாகும். மனதின் தொழிட்பாட்டினை நிறுத்துவதென்பது மிகவும் கடினமான ஒரு வேலையாகும். அது தேவையுமற்றது. 

எமது மனமானது தொடந்து வேலைசெய்து கொண்டிருப்பதற்குப் பழக்கப்பட்டுவிட்டது. ஒரு வாகனமானது அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது நாம் திடீரென்று அதனை நிறுத்துவோமேயானால், அது நிற்கும். ஆனால் இத்தகைய செயல்பாட்டினால் பழுதுகள் உண்டாகிவிடுவதும் சாத்தியமே. அதேபோலவே, தொடந்து ஓடிக்கொண்டிருப்பதற்குப் பழக்கப்பட்டுவிட்ட மனத்தினை திடீரென்று நிறுத்துவோமேயானால், அது மிகவும் சிரமமானதாக இருக்கும் அல்லது அது மிகக் குறுகிய காலத்திற்கே வெற்றியை அளிக்கும். மனமானது மீண்டும் வேறொரு திசையில் சென்று பின்பு மொத்தமாகவே அதனது கட்டுப்பாட்டினை நாம் இழந்துவிடுகிறோம்.  

அனுபவநிலை 

தந்தை எமக்கு மிக அழகான ஒரு முறையினை சொல்லித்தருகிறார். அதாவது, மனதினை ஓடவிடுங்கள். வெறுமனே அது செல்லும் திசையினை கட்டுப்படுத்துங்கள். புத்தியானது ஞானத்தினைக் கொண்டிருக்கும்போது, எமது எண்ணங்களானது சாதாரண பௌதீக செயல்களிலிருந்து விலகி "நான் யார்? எனது ஆதி பண்புகள் என்ன? எனது வீடு எது? எனது தந்தை யார்? அவருடனான எனது உறவுமுறை என்ன? அவரது பண்புகள் யாவை? அவர் எங்கு இருக்கிறார்? அவர் என்ன செய்கிறார்?" போன்ற உயர்ந்த சுயதேடல்சார்ந்த எண்ணங்களைக் கொண்டிருக்கும். 

இவ்வனைத்து கேள்விகளுக்கான விடைகளும் ராஜயோகதியானத்தில் தரப்படுகிறது. ஆத்மாவானது இக்கேள்விகளை மிக ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்குகிறது. ஞானத்தினை நன்றாக கடைந்து இவற்றிற்கான விடைகளை ஆத்மாவானது தெளிவாகக் கண்டுகொள்ளும்போது, அது மிக இயல்பாகவே பௌதீக உலகிலிருந்து சூட்சும உலகிற்கு சென்றுவிடுகிறது. பின்பு தியானம் மிக இயல்பாகவே நடக்கும்.

பரமாத்மாமீதான முழுமுக ஒருமைப்பாட்டினை நாம் அடைந்து மிக மிக ஆழமாகச் செல்லும்போது அவரின் பண்புகளை கண்டறிந்து, அவருடன் எமக்குள்ள பலவிதமான உறவுமுறைகளையும் அனுபவம் செய்கிறோம். உணர்வு நிலையுடைய எண்ணங்கள் இன்னும் தொழிட்படினும் அவையனைத்தும் ஆத்மீக ஞானத்தின் வேறெந்தப் பகுதிகளிலுமல்லாமல் தந்தை ஒருவரிடமே ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும். 

தியான நிலையின்போது ஆத்மீக ஞானத்தின் பல்வேறு பகுதிகள் எடுத்துக்கொள்ளப்படினும், ஒருமுகப்படுத்தும் நிலையில் நாம் பரமாத்மாவுடன் மட்டுமே தொடர்பில் இருக்கிறோம். எமது எண்ணங்கள் ஓடுவதை நிறுத்தி அமைதியாகின்றன. மனமானது அசைவற்று இருக்கும்போது பரமாத்மா எம்மிடம் பேசுவது கேட்கத் தொடங்கும். ஒருமுகப்படுத்தலின் ஒருகட்டத்தில் பரமாத்மா உண்மையில் எவ்வாறு இருக்கிறாரோ அவ்வாறே எம்மால் அவரை முழுவதுமாக அனுபவம் செய்ய முடியும். 

இதன்போது பரமாத்மாவின் பண்புகளால் நாம் முழுதாக நிரப்பப்படுகிறோம். அவற்றை கிரகித்து நாம் மாற்றமடைகிறோம். பின்பு அவற்றினை அகிலத்திற்கு பரப்பத் தொடங்குகிறோம். 

இப்போது எந்த உணர்வுள்ள நினைவுகளும் எம்மிடம் காணப்படாது. முற்றிலும் அனுபவநிலை நிறைந்திருக்கும். இந்நிலையிலிருந்து மீண்டு வந்ததும் எம்மால் அதை வகைப்படுத்த முடியும். எண்ணங்கள் மீண்டும் ஆரம்பிக்கின்றன. ஆனால் அத்தகைய அனுபவ நிலையில் எவ்வித என்ணங்களுமே காணப்படாது.







  


Wednesday, November 12, 2014

ராஜயோக தியானம் : வளர்ச்சிப் படிநிலைகள்


ராஜயோகமானது சமாத்வ (மனஅமைதி அல்லது உள்முகச் சமநிலை) யோகமாகும். பரம தந்தையுடனான தொடர்பில் நாம் இருப்பதனால் ஏற்றத்தாழ்வுமிக்க புற உலகின் செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். இந்த தூய்மையற்ற கலியுகத்தின் எதிர்மறையான தாக்கத்திலிருந்து விடுபடுகிறோம். எமது எண்ணங்கள், புத்தி மற்றும் சம்ஸ்காரங்கள் அனைத்துமே பரமாத்மாவின் பண்புகளின் செல்வாக்கின்கீழ் மட்டுமே இருப்பதனால் உள்முகச் சமநிலை ஏற்படுவதுடன் எமது இருப்பின் முழுமையும் அதனைப் பிரதிபலிக்கிறது.

இங்கே விவரிக்கப்பட்டவை தவிர இன்னும் பல யோகமுறைகள் காணப்படுகின்றன. இருப்பினும் அவை அனைத்துமே ராஜயோகத்தினுள் உள்ளடங்குகின்றன. எனவே இந்த அதிமேன்மையான யோகமே எம்மை முற்றுமுழுதாக விருத்தி செய்வதற்கான, ஆத்மாவுக்கான யோகமாகும்.
   
ராஜயோகத்தின் வளர்ச்சிப் படிநிலைகள் பிரதானமாக மூன்று வகைப்படும். 

முதல் நிலை : தியானம் 
ராஜயோகத்தினது அடிப்படையானது பல யோகமுறைகளிலிருந்தும் வேறுபட்டதாகும். இதனது ஆரம்ப நிலை தியானம் என்றழைக்கப்படுகிறது. ஆனால் இந்த தியானத்தில் எவ்வித மந்திர உச்சாடனங்களோ, ஒலிகளோ அல்லது பௌதீக வடிவங்களோ பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக ஞானமே உபயோகிக்கப்படுகிறது. 

தியானத்தின் ஆரம்ப நிலையானது, 'நான் ஓர் ஆத்மா' என்ற நினைவில் மனதை நிலைக்கச் செய்வதாகும். அப்போது புத்தியானது சம்ஸ்காரத்தினுள் ஆழமாகச் சென்று சக்தி வாய்ந்த அமைதி மற்றும் தூய்மையை வெளிக்கொண்டுவரும். இதற்க்கு புத்தி வலிமை பெறவேண்டும். ஞானம் மட்டுமே போதாது. 

இரண்டாவது நிலை : ஒருமுகப்படுத்துதல் 
ஒருமுகப்படுத்துதல் என்றால் மனதை ஒரு எண்ணத்தில் நிலைக்கச் செய்தல். அச்சமயம் மனமானது அத்தகைய எண்ணத்தின் வடிவத்தினைப் பெறுகிறது. தியானத்தின் மூலம் பல்வேறு திசைகளில் செல்லும் எண்ணங்களானது நிறுத்தப்பட்டு மனம் ஒருமுகப்படுகிறது. இதன்போது புத்தியானது கூர்மையாகிறது. ராஜயோகியானவர், பௌதீக வடிவத்தில் தனது மனதினை ஒருமுகப்படுத்துவதை விடுத்து, பௌதீக உருவமற்ற அசரீரியான பரமாத்மாவுடன் இணைப்பினை ஏற்படுத்துகிறார். 

ஆரம்பத்தில் மனதை சில விநாடிகளுக்குமேல் ஒருமுகப்படுத்துவது கடினமாக இருக்கலாம். எண்ணங்கள் இலகுவில் சிதறி பல திசைகளில் மீண்டும் சென்றுவிடும். எனினும் ஒருவினாடி மட்டுமே ஒருமுகப்படுத்த முடிந்தாலும் அது மிகப்பெரிய வெற்றியேயாகும். ஏனெனில் அந்த ஒருவினாடியே தொடர்ந்து ஒருமுகப்படுத்தவேண்டும் என்ற வேட்கையை உருவாக்குகிறது. இதனை சோதனைசெய்து பார்க்கும் காலகட்டமாக எடுத்துக்கொள்ளலாம். இதன்போது கடந்தகால சம்ஸ்காரங்கள், மற்றும் உடலைப்பற்றிய எண்ணங்களும் வந்து இடையூறு விளைவிக்கும். எனினும் நாம் இவற்றை சாதகமாக எடுத்துக்கொண்டு பாதகமான எண்ணங்களை ஞானக்கருத்துகளை மனதில் கொண்டுவருவதன் மூலம் அகற்றமுடியும். 

மூன்றாவது நிலை : உணர்தல் 
ராஜயோக தியானத்தின் முழு நோக்கமுமே பரமாத்மா மீதான முழுமுக ஒருமைப்பாடு அல்லது தொடர்பினை ஏற்படுத்துதல் ஆகும். கடவுளின் உருவம் மற்றும் குணங்களின் மீது ஒருமுகப்படுத்தும்போது தியானத்துக்குத் தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகின்றன. இந்த முழுமுக ஒருமைப்பாடானது உணர்தல் என அழைக்கப்படுகிறது. 

வேறு சில யோகங்களை பயிற்சி செய்யும் யோகிகள் கட்டாயத்தின் அடிப்படையில் எதிர்மறையான எண்ணங்களை வெளியேற்றி மனதினை வெறுமையாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள். இத்தகைய முறையில் மனமானது தற்காலிகமாகவே காலியாக இருக்கும்.  அத்துடன் எதிர்மறையான எண்ணங்களுடன் சேர்த்து நல்ல எண்ணங்களும் வெளியேற்றப்படுகின்றன. தூய எண்ணங்கள் ஆத்மாவுக்கு ஊட்டச்சத்து போன்றவை. இவை ஞானத்தினை நடைமுறையில் உணர்த்துகின்றன. மனமானது தூய சக்திவாய்ந்த எண்ணங்களின் ஓட்டத்தினை அனுபவம் செய்யும்போது, ஆத்மாவானது தூய குணங்களின் அனுபவத்தில் இருப்பது சாத்தியமாகிறது. 

மந்திரம் அல்லது பொருளை உபயோகித்தல்
ஒரு மந்திரத்தையோ அல்லது பொருளினையோ பயன்படுத்தி தியானம் செய்யுமிடத்து எம்மால் அதிக பட்சமாக, அந்த மந்திரத்தின் மீதோ அல்லது பொருளின்மீதோ தான் மன ஒருமுகப்பாட்டை அடையமுடிகிறது. இதனால் நாம் மிக நிச்சயமாக பரமாத்மாவுடனான தொடர்பை அனுபவம் செய்வததிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். இத்தகைய முறைகள் மூலம் எமது எண்ணங்களானது, எமது பௌதீக இருப்பு சார்ந்த, எமக்கு இதுவரை காலமும் துன்பத்தை வழங்கிய அல்லது குற்ற உணர்வுகளை ஏற்படுத்திய எண்ணங்களிலிருந்து விலகிவிடுவதனால் நாம் ஓரளவு மன அமைதியை பெறமுடியும். இருப்பினும் எமது எண்ணங்கள் குறித்த மந்திரத்தை அல்லது பொருளை நோக்கி இருக்கும் வரையில் மட்டுமே எம்மால் தியானத்தினை செய்யமுடிகிறது. எனவே தியான காலம் முடிவடைந்த பின்னர் நாம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுகிறோம்.

ராஜயோக தியானமானது வெறுமனே மன ஒருமைப்பாட்டிற்கான பயிற்சியாக அல்லாமல், இறைவனுடனான தொடர்பினை பெறுவதை பிரதான நோக்கமாகக் கொண்டது. இறைவனுடன் எவ்வாறு தொடர்பினை ஏற்படுத்துவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம். 






Friday, November 7, 2014

ராஜயோக தியானம் : ராஜயோகத்தில் உள்ளடங்கும் யோகமுறைகள்


ராஜயோகமானது முக்கியமானதாக முதலில் புத்தி யோகம் என்று கூறப்படலாம். ஏனெனில் இந்த யோகமானது அதிகளவில் புத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆத்மாவில் புத்தியானது ஞானத்தினைக் கிரகிக்கின்றது. எனவே ராஜயோகமானது ஞானயோகமாகவும் இருக்கிறது. புத்தியானது ஞானத்தினை உபயோகித்து பரமாத்மாவுடன் தொடர்பினை ஏற்படுத்தியவுடனேயே அவரை தாயாக, தந்தையாக மட்டுமல்லாது நண்பனாக, அன்புக்குரியவராக மற்றும் துணையாக அன்பினை வெளிப்படுத்துகிறது. எனவே இதில் பக்தி யோகத்தில் வெளிப்படுத்தப்படும் அன்பு இருக்கிறது. இத்தகைய அன்பு இல்லாமல் ஆத்மாவினால் பரமாத்மாவுடனான பூரணத்துவமான உறவுமுறை உருவாக முடியாது.

துறவு மூலமான யோகம்: பரமாத்மா மீதான இத்தகைய அன்பின் மூலம் ஆத்மாவானது இயல்பாகவே அனைத்திலிருந்தும் விலகி இறைவன் ஒருவரிடமே வந்துவிடுகிறது. எனவே ராஜயோகத்தினை சந்நியாச (துறவு) யோகம் என்றும் சொல்லலாம். ஆனால் இந்த துறவானது பௌதீகமானதல்ல. நாம் பௌதீகமாக ஒன்றினை துறந்துவிட்டு, மனதில் எந்நேரமும் அதனையே நினைத்துக் கொண்டிருந்தால் அதனை துறவு என்று சொல்லமுடியாது. அது வெறும் போலியான துறவேயாகும். எனினும், பரமாத்மாவினது அன்பினை அடையாளம் கண்டு அவரை நோக்கி எமது மனமானது கவரப்படுமேயானால், எமது எண்ணங்கள் மற்றும் புத்தியானது இந்த பௌதீக உலகத்தினது கவர்ச்சிகளிளிருந்து விடுபட்டுவிட்டது அல்லது அவற்றினை துறந்துவிட்டது எனலாம். இதுவே அதியுயர்ந்த, இயல்பான, எல்லையற்ற துறவாகும். 

கட்டுப்பாடு மற்றும் திடசங்கல்பத்தின் மூலமான யோகம்: ராஜயோகம் ஒரு ஹத யோகமுமாகும். ஹத என்றால் கட்டுப்பாடான ஒழுங்குமுறை அல்லது வலிமைமிக்க பயிற்சிமுறை என்பதாகும். ராஜயோகத்தில் ஆத்மாவினது ஆழமான புரிந்துணர்வினால், இயல்பான கட்டுப்பாடுகளும், வலிமை மற்றும் சக்தியும் வந்துவிடுகின்றன. இங்கே எவ்வித பௌதீகமான ஆசனங்களும் செய்யாதுவிடினும், ஆத்மாவானது கட்டுப்பாட்டில் இருப்பதனால் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல், தேவையான மனோரீதியான ஸ்திர நிலையில் நிலைத்திருக்கிறது.

ஹத என்றால் திடசங்கல்பம். ஆத்மாவினது திடசங்கல்பம் இல்லாது ராஜயோகம் கைகூடாது. இருப்பினும் இந்த திடசங்கல்ப்பமானது உள்முகமானது. உடலை பத்மாசனத்தில் வைத்திருப்பதற்குப் பதிலாக ராஜயோகியானவர் தனது மனதினை அந்நிலையில் வைத்திருக்கிறார். அதாவது தூய்மையற்ற இந்த பழைய கலியுகத்தில் வாழும்போதும், ஆத்மாவானது அவற்றினால் பாதிக்கப்படாமலும், தூய்மையற்றவற்றின் செல்வாக்கினுள் சென்றுவிடாமலும் தாமரை மலர் போன்று இருக்கிறது.

உடலுக்கு ஓய்வினை வழங்கும் சவாசனம் ராஜயோகத்தில் இல்லை. எனினும் ஆத்மாவானது தனது பௌதீக உடையான அதன் உடலிலிருந்தும், புலனுனர்வுகளிலிருந்தும் விடுபட்டு இருப்பதனால் அதனால் சவாசனத்தினை செய்வதனை விடவும் உயர்ந்த முழுமையான ஓய்வு நிலையை அனுபவம் செய்ய முடிகிறது. 

இவ்வாறாக, ராஜயோகத்தில் அனைத்தும் உள்முக வளர்ச்சிகுரியவையாக மாற்றப்பட்டு, அவற்றின் மேம்பாட்டின் மூலம் முழுதான சமநிலை பெறப்படுகிறது.


செயல்கள் மூலமான யோகம்: ராஜயோகம் ஓர் கர்மயோகமுமாகும் (கர்மம் என்றால் செயல்கள்). கர்மயோகமானது மூன்று வகைப்படும்.

முதலாவதாக, இது செயல்களை செய்துகொண்டே பயிற்சி செய்யும் யோகம். ராஜயோகம் என்பது வெறுமனே எமது அன்பான எண்ணங்கள் மூலமாக பரமாத்மாவுடனான தொடர்பினை ஏற்படுத்துதல் என்பதனால், பௌதீக ரீதியான ஆசனங்களோ, வேறெந்த பௌதீக உதவிகளோ அல்லது கருவிகளோ தேவையில்லை. எனவே நாம் எமது கைகளால் செயல்களைச் செய்துகொண்டிருக்கும்போதே எமது எண்ணங்களை பரமாத்மாவுடன் இணைத்து முழுமையான யோகத்தில் இருக்க முடியும்.

நடக்கும்போதும், பேசும்போதும், இருக்கும்போதும், உண்ணும்போதும், இன்னும் வேறெந்த செயல்களில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதும் கூட எமது எண்ணங்கள் அன்புக்குரிய பரமாத்மாவுடன் இணைந்திருக்கின்றன. எனவே இந்த யோகமே அனைத்து செயல்கள் செய்யும்போதும் தொடர்ந்தும் நிலை மாறாமல் செய்யக்கூடிய ஒன்றாகும்.

இரண்டாவதாக, கர்மயோகத்தினை எமது கர்மங்களின் (செயல்களின்) வெளிப்பாடு என்றும் சொல்லலாம். பரமாத்மாவுடனான எமது தொடர்பானது எம்மை அன்பு, அமைதி, தூய்மை, என்பவற்றினால் நிரப்புகிறது. எனவே எமது செயல்கள் இந்நிலையின் (யோகி நிலையின்) வெளிப்பாடாகவே இருக்கும். செயல்களானது மாற்றமடைந்து தூய்மை நிறைந்ததாகவும், அமைதி மற்றும் அன்பினை பரப்புபவனவாகவும் இருக்கும்.

மூன்றாவதாக, கர்மயோகமானது எமது யோகத்தினை வலுவூட்டும் ஒரு செயல் (கர்மம்) ஆகும். அதாவது இதன் மூலமாக நாம் பரமாத்மாவுக்கு மிக அருகில் வருகிறோம் அல்லது பரமாத்மாவுடனான எமது இணைப்பு மிகவும் வலிமை பெறுகிறது. மனிதர்களுடனான கர்ம பரிமாற்றங்கள் (கொடுக்கல் வாங்கல்) மூலமாக உறவுமுறை உருவாகிறது. அதேபோல் இறைவன் மீதுள்ள அன்பினால், அந்த அன்பின் மூலம் செய்யப்படும் செயல்கள் எமது யோகத்தினை வலிமையாக்குவதுடன், எம்மை இறைவனுடன் மிக நெருக்கத்தில் கொண்டு சேர்க்கிறது. எனவே ராஜயோகம் ஓர் உண்மையான கர்மயோகமுமாகும்.




Tuesday, November 4, 2014

ராஜயோக தியானம் : யோகமுறையை தெரிவுசெய்தல்

பல வகையான யோக முறைகள் இருப்பதனால், அவரவர் சுபாவத்திற்கு ஏற்ற யோகமுறையை தேர்ந்தெடுத்து பின்பற்றுவது நல்லது என்று கூறப்படுகிறது. இந்த கூற்றானது எவ்வளவு தூரம் சரியானது என்று பார்ப்போம்.

அன்பு மற்றும் பக்தி மூலமான யோகம் : ராஜயோகம் என்றால் ஆத்மாவின் பூரணவிருத்தி ஆகும். நாம் பக்தி மார்க்கத்தினை தேர்வுசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகையில் இறுதி விளைவு என்னவாக இருக்கும்? பக்தி மூலம் பரமாத்மா மீதான அன்பு வெளிப்படுத்தப்படுகிறது, அதேபோல் பரமாத்மாவினது அன்பும் உணரப்படுகிறது. பணிவு வருகிறது. ஆனால் ஆத்மாவிற்கு அன்பு மட்டுமே போதுமானதல்ல, மேலும் அதிகளவிலானவை தேவைப்படுகின்றன.

எமது ஆத்மாவில், அன்பினுடைய, உணர்ச்சிகள் என்ற அம்சம் மட்டுமே விருத்தியாக்கிக்கொண்டு போகுமேயானால், எமது நடத்தைகள் ஆபத்தான பாணியில் விருத்தியாக்கிக்கொண்டு செல்லும். எனவே பரமாத்மா மீது அன்பு செலுத்துவது மட்டுமல்லாது, அவரது அறிவுறுத்தல்களை பின்பற்றுவதற்கும், வாழ்க்கைக்கு அவசியமான வழிகாட்டல்களுக்கு கீழ்படிந்து நடப்பதற்கும் அவரைப்பற்றி அறிந்திருப்பதும் அவசியமாகிறது. எனவே நாம் தனியே பக்தியோகியாக இருப்போமேயானால் அன்பு விருத்தியாகும். ஆனால் எவ்வித புரிந்துணர்வோ மெய்ஞானமோ காணப்படாது. இதனால் ஆத்மாவானது வலிமையற்றிருக்கும். 

கற்றல் அறிவு மூலமான யோகம் : ஞானயோகம் என்றழைக்கப்படும் கற்றல் அறிவு மூலமான யோகமும் எமக்குத் தேவையானதே. இந்த அறிவின் மூலமே புறத்தூண்டுதல்களிலிருந்து எம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.  

மெய்ஞானத்தின் ஆழமான உணர்தலின் மூலமான புத்தி யோகம் : இறைவன் மீது அன்பு மட்டுமே உள்ளபோது, ஏதாவது ஒரு குறிப்பிட்ட கணத்தில் இருக்கும் எமது பக்தி உணர்வினைவிட அதிகமான வலிமையுள்ள ஏதாவது சலனத்தினால் எமது யோகமானது குழப்பப்படுவது சாத்தியமே. ஆனால் ஞானத்தினது ஆழமான உணர்தல் மூலமான யோகத்தின் மூலம் ஆத்மாவானது தடைகள், சிரமங்கள் மற்றும் சலனங்களை இலகுவில் அடையாளம் கண்டு அவற்றில் சிக்காமல் உறுதியான யோகத்தில் நிலைத்திருக்க முடிகிறது. ஞான யோகமானது புத்தி யோகத்துடன் தொடர்புடையதாகும்.

யோகங்களின் சமநிலை: ஞானயோகம் மற்றும் புத்தியோகம் என்பன தனித்த யோகங்களாகும். இவற்றினை மட்டுமே பின்பற்றும் ஒருவரிடம் அகந்தை மற்றும் அராஜகம் என்பன விருத்தியாகி பூரணத்துவமான ஆளுமை விருத்தி ஏற்படாமல் போகலாம். முழுமையான ஆளுமை விருத்தியில் அன்பு மற்றும் நெறிமுறைகள் சரியான அளவில் கலந்திருக்கும். அதாவது நெறிமுறைகளினால் வழிப்படுத்தப்பட்ட அன்பாகவும், இனிமை மற்றும் அன்பு கலந்த நெறிமுறைகளாகவும் இருக்கும். எனவே முழுமையான சமநிலைப்படுத்தப்பட்ட ஆளுமை விருத்திக்கு இவையிரண்டும் அத்தியாவசியமாகிறது.

பக்தி மூலமாக எமது சுபாவத்தில் இனிமை விருத்தியாகிறது. அதேபோல் ஞானத்தின் மூலமாக ஆத்மாவில் வலிமை விருத்தியாகின்றது. எனவே எனது யோகத்தினை பகுதிகளாகப் பிரித்துவிட்டு அதில் ஒன்றைத்தான் தெரிவு செய்யவேண்டும் என்று சொல்லமுடியாது. மாறாக, இவையிரண்டும் சேர்ந்ததாகவுள்ள ஒரு யோகத்தினை நாம் தெரிவுசெய்ய வேண்டும். ராஜயோகமானது இவையனைத்து யோகங்களையும் ஒரே கட்டமைப்புக்குள் உள்ளடக்கியிருக்கிறது.

பக்தி, ஞானம், புத்தி யோகங்களைத் தவிர மேலும் மூன்று பிரதான யோகமுறைகளையும் ராஜயோகமானது உள்ளடக்கியிருக்கிறது. அவற்றினை அடுத்த பதிவில் பார்ப்போம்.







Monday, November 3, 2014

ராஜயோக தியானம் : குறிக்கோள்

'ஓம் சாந்தி' என்பதன் அர்த்தம், 'நான் ஓர் அமைதியான ஆத்மா' என்ற விழிப்புணர்வு, என்பதை முன்னமே பார்த்திருந்தோம். ராஜயோகத்தினது சாராம்சம் இதுவேயாகும். ராஜயோகமானது பரமதந்தையினால் மானிட கருவியாகிய பிரஜாபிதா பிரம்மாவினூடாக கற்பிக்கப்பட்டதாகும்.

ராஜயோகம் என்பது பல நூற்றுக்கணக்கான வருடங்களாக வழக்கத்தில் இருந்த போதிலும், கீதையை போதித்தவரும் கீதையின் கடவுளுமாகிய இறைவனால் பயிற்றுவிக்கப்பட்ட ஆதியான ராஜயோகமானது மனிதகுலத்திலிருந்து அழிந்துவிட்டது.  எனவே தான் எம்மால் அதியுயர்ந்த இணைப்பினை, உண்மையான யோகத்தினை அனுபவம் செய்யமுடியாமல் இருக்கின்றது. கீதையில் இறைவனால் வழங்கப்பட்ட "எப்போதெல்லாம் அதர்மம் தழைத்தோங்குகிறதோ அப்போது, அதர்மத்தினை அழித்து தர்மத்தினை நிலைநாட்ட நான் அவதரிக்கிறேன்.  ராஜயோகத்தினை கற்பிக்க வருகிறேன்." என்ற வாக்குறுதியின்படி இந்தக் கல்வியானது அவரால் மீண்டும் தரப்படுகிறது. 

குறிக்கோள்: ராஜயோக கல்வியினது நோக்கம் சம்பூர்ணநிலையை அடைதலாகும். இது வெறுமனே ஒரு சிறிய மாற்றத்திலோ அல்லது ஒருமனிதனை சற்றே மேம்பட்ட நிலைக்கு கொண்டுசெல்வதிலோ அல்ல. மாறாக இதன் குறிக்கோளும், வரைவிலக்கணமுமே முழுதான பூரணத்துவமாகும். எனவேதான் இது அனைத்து விதமான கல்வியை விடவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்ததாக இருந்த ஆத்மாவானது, தற்போது அதனை இழந்துவிட்டது. ஆனால் அதனை மீண்டும் ஆத்மாவால் பெற்றுக்கொள்ள முடியும். எனவே ராஜயோகமானது ஆத்மாவுக்கானது. இந்த தியான முறையினால் ஒருவரின் நடத்தையில், குணத்தில், சம்ஸ்காரங்களில் மாற்றம் ஏற்படுகின்றது. இதன் மூலம் பல காலமாக ஆத்மாவில் பதியப்பட்டு வந்த தீய பண்புகள் அகற்றப்படுவதனால், ஆத்மாவினது ஆதியான தெய்வீகத்தன்மை மீண்டும் பிரகாசிக்கத் தொடங்குகிறது.

முறை: பரமாத்மாவுடனான இணைப்பே, ராஜயோகத்தினது குறிக்கோளாகிய சம்பூர்ண நிலையை அடையும் வழிமுறையாகும். மனிதர்களுடனான அல்லது தீர்க்கதரிசிகளுடனான அல்லது இறைதூதர்களுடனான தொடர்பின் மூலம் நாம் எமது அதியுயர்ந்த நிலையை அடைய முடியாது.  மாறாக, பரமாத்மாவுடனான தொடர்பின் மூலம், எமது குறைபாடுகளை நீக்குவதற்கான வலிமையை பெற்றுக்கொள்வதுடன், பரிபூரண நிலையை அடைவதற்குத் தேவையான அனைத்து தெய்வீக குணங்களை கிரகிக்கக் கூடிய ஆற்றலினையும் பெற்றுக்கொள்கிறோம்.

சம்பூர்ண நிலை (கர்மாதீத் நிலை)

கர்மாதீத் நிலை என்பது, விகாரங்கள் எதுமற்ற, திவ்யகுணங்கள் நிறைந்த, வன்முறையற்ற, தெய்வீக பண்புகள் நிறைந்த நிலையாகும். அதியுயர் ஒழுக்க நெறிகளை பின்பற்றி ஆத்மாவானது இந்த நிலையை அடைகிறது. பரம தந்தையினால் கற்பிக்கப்படும் ஞானத்தினாலும், தியான முறையினாலும் இது சாத்தியமாகிறது.

யோகம் என்றால் இணைப்பு என்று அர்த்தம். எனவே ராஜயோகம் என்றால் பரமாத்மாவுடனான இணைப்பு என்று அர்த்தம். இது அனைத்து தொடர்புகளையும் விட அதியுயர்ந்த தொடர்பு என்றும் அர்த்தமாகிறது. இந்த யோகத்தின் மூலம் ஆத்மாவானது தான் இழந்துவிட்ட தனது அதியுயர் ஸ்தானத்தினை திரும்பப் பெறுகிறது. எமது மனதிற்கு, எமது புலன்களுக்கு, எமது நடத்தைகளுக்கு என்று, எமக்கு நாமே அதிபதியாவதால் எமக்கு விருப்பமான பாதையில் எம்மை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆத்மாவானது புற நிகழ்வுகளாலும், புறக் காரணிகள் மற்றும் மனிதர்களாலும் ஆட்டுவிக்கப்பட்டு திசைதிருப்பப்படாமல், தனது இலக்கினை தெளிவாகக் காண்கிறது. அதுமட்டுமல்லாமல் அதனால் தனது குறிக்கோளை நோக்கி திடசங்கல்ப்பத்துடன் சென்று இறுதி இலக்கினை இலகுவாக அடையமுடிகிறது.

ராஜயோகமானது அதியுயர்ந்ததாக இருக்கும் அதேவேளையில், மிகவும் சிரமாமானதாகவும் உள்ளதாக சில சமயங்களில் எம்மால் உணரப்படுகிறது. எதுவுமே உண்மையிலிருந்து அப்பால் செல்லமுடியாது. ஏனெனில் ராஜயோகமானது எமது உண்மை நிலையினது இயல்பான விழிப்புணர்வாகும். இது எவ்வாறு சிரமாயிருக்க முடியும்? ராஜயோகமானது வெகு இயல்பானது. தந்தையுடனான அன்புநிறைந்த தொடர்பு. அன்பான தந்தையுடனான தொடர்பானது எவ்வாறு சிரமமானதாக இருக்க முடியும்?

எனினும் சரியான புரிந்துணர்வு அல்லது தெளிவான ஞானம் இல்லாத காரணத்தினால் சுய அடையாளத்தை பற்றிய மற்றும் எமது தந்தையைப் பற்றிய குழப்பங்கள் உருவாகின்றன. அப்போது யோகம் சிரமமாகிறது. ஆனால் எமக்கு இவற்றினைப்பற்றி தெளிவான அறிமுகம் இருக்கும் போது எம்மால் அதன் அடிப்படையில் தொடர்பினை இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. இந்த உறவுமுறையில் நன்மைகளை அனுபவம் செய்யும்போது தொடர்பானது ஆழமாகி சம்பூர்ண இணைப்பு மற்றும் நல்லிணக்கம் உருவாகி, ஆத்மாவானது பரமாத்மாவினது பிரதியாக ஆகிறது. பரமாத்மாவின் பண்புகளுடன் அது மீளுருவாக்கம் அடைகிறது.