Showing posts with label omnipresence. Show all posts
Showing posts with label omnipresence. Show all posts

Tuesday, October 28, 2014

ராஜயோக தியானம் : பரமாத்மா எங்கும் நிறைந்தவரா?

பரமாத்மாவினை சின்னஞ்ச் சிறிய புள்ளியாக, நிலையான வடிவம், இருப்பிடம் கொண்டவராக கருதுவதென்பது சற்றே அந்நியமாகத் தோன்றலாம். இறைவனானவர் பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருப்பவர், அதாவது சர்வவியாபி என்பது,  கிழக்கு மற்றும் மேற்கத்தைய நாடுகளில் பரவலாக இருக்கும் ஒரு வலுவான கொள்கையாகும். இதனோடு தொடர்புபட்ட சில கருத்துக்களை இப்போது ஆராய்வோம்.

பரமாத்மாவானவர் எங்கும் வியாபித்திருப்பவர் எனில் அவரது பண்புகளும் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்க வேண்டுமல்லவா? அவ்வாறெனில் உயிருள்ளவற்றிட்கும் உயிரற்றவைக்கும் எவ்வித வித்தியாசமுமிருக்காது. ஏனெனில் அனைத்துமே நிச்சயமாக பரமாத்மாவின் பண்புகளை பிரதிபலிப்பனவாக இருக்கும். பாவச்செயல்கள், தூய்மையின்மை, அமைதியின்மை போன்றவை இல்லாமல் பரமாத்மாவின் பண்புகளான அன்பு, தூய்மை, ஞானம், அமைதி மற்றும் பேரானந்தம் போன்றவை மாத்திரமே வெளிப்படுத்தப்படும். 

ஆத்மாவானது அறியாமையினால் சூழப்பட்டதனால் தான் இறைவனது பண்புகளை கிரகிக்க முடியவில்லை எனில், எனக்குள் இறைவன் இருக்கிறார் எனும்போது அறியாமை எங்கிருந்து வரமுடியும்? என்ற கேள்வி எழுகிறது. பரமாத்மாவிடம் அறியாமை வந்துவிட்டது என்பதை நான் குறித்து நிற்கவில்லையா? 

பரமாத்மாவாவை எல்லையற்ற சமுத்திரம் எனவும் ஆத்மாக்களை அதன் துளிகள் எனவும், சமுத்திரம் பின்னர் அத்துளிகளை இணைத்துக்கொள்ளும் எனவும் கூறப்படுகிறது. எனில் சமுத்திரத்தினது துளிகள் அனைத்தும் சமுத்திரத்தின் அதே கூறுகளையும், பண்புகளையும் கொண்டிருக்கவேண்டியதும் அவசியமானதாகிறது. 

இப்போது பரமாத்மாவை ஒரு இடத்தில் இருப்பவராகவும், அவரது பண்புகள் அவ்விடத்திலிருந்து வெளிப்படுவதாகவும் கருதுவோம். நாம் இப்போது எவ்விடத்திலிருந்தாலும் எமது எண்ணங்களை அவரிடம் வழிப்படுத்தும்போது, அந்த அதிர்வலைகளை எம்மால் பெற்று, தொடர்பினை அனுபவம் செய்ய முடியும். ஒரு வானொலி நிலையத்திலிருந்து அனைத்து இடங்களுக்கும் வானலை பரவுகிறது. எங்கே ஒலிவாங்கி சரியான அலைநீளத்தில் அல்லது மீடிறன் ஒத்திசைவில் வைக்கப்பட்டிருக்கிறதோ அங்கே அந்த வானலைகளை பெறமுடிகிறது. எமது அன்றாட வாழ்வில் ஏன் இதுவரை எம்மால் பரமாத்மாவை அனுபவம் செய்ய முடியவில்லை என்பதற்கான சரியான விளக்கம் இதுவே. 

எமது மனமானது, எம்மைச் சுற்றியுள்ள பௌதீக பொருட்களின் மீதும் செயல்பாடுகளின் மீதும் ஒத்திசைவில் வைக்கப்பட்டுள்ளதால், எம்மால் பரமாத்மாவினது அதிர்வலைகளை பெற முடியவில்லை. நாம் வேறோர் அலைநீளத்தில் இருக்கிறோம். எமது எண்ணங்கள் பௌதீகத்திலிருந்து, ஆத்மவுணர்வு நிலைக்கு நகருமாயின், எம்மால் அந்த அதிர்வலைகளை பெறுவது இலகுவாகி, அவற்றின் மூலம் எமது தந்தையாகிய சிவபாபாவுடன் தொடர்பேற்படுத்தி அனுபவம் செய்ய முடியும்.