Showing posts with label the experience. Show all posts
Showing posts with label the experience. Show all posts

Thursday, November 13, 2014

ராஜயோக தியானம் : தொடர்பினை ஏற்படுத்துதல்


பேச்சின் ஒலிவடிவம் மற்றும் கண்களின் பார்வை போன்ற பௌதீக சக்திகளினால் இருவர் தொடர்பினை ஏற்படுத்தும்போது அதன் அடிப்படையில் இருப்பது எண்ணங்கள் மூலமான தொடர்பேயாகும். அங்கே உண்மையில் அவர்களின் எண்ணங்களின் இசைவாக்க தொடர்பாடலே நிகழ்கிறது. இதேபோன்று நாம் பரமதந்தையுடன் தொடர்பினை ஏற்படுத்துவதற்கும் எமது எண்ணங்களையே உபயோகப்படுத்துகிறோம். 

இதனாலேயே கீதையில் 'மன்மனாபவ' என்று அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. அதன் அர்த்தம் உங்களின் மனதினை என்மீது ஒருமுகப்படுத்துங்கள் என்பதாகும்.

ஒரு பக்கம் பார்த்தால் இது மிக இலகுவானதாக தோன்றும். கடுந்தவம் மற்றும் வழிபாடுகள் என்று எமது பௌதீக உடலுக்கு எவ்வித கஷ்டங்களும் கொடுக்கவேண்டியதில்லை. நாம் செய்யவேண்டியதேல்லாமே எமது எண்ணங்களினை, மனதினை இறைவனை நோக்கித் திருப்புவதேயாகும். இத்தகைய மிக இலகுவான செயலே எமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. ஏனெனில் எமது எண்ணங்களினை எங்கே ஒருமுகப்படுத்துவது என்று எமக்குத் தெரியாது. அவற்றினை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்றும் தெரியாது.

இதனாலேயே தான் ஞானம் தேவைப்படுகிறது. நான் யார் என்று அறிந்து கொள்வதன் மூலம் ஆத்மாவானது எவ்வாறு எண்ணங்களை உருவாக்குகிறது என்று தெரியவருகிறது. பரமாத்மாவினைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் அவர்மீது எமது எண்ணங்களை ஒருமுகப்படுத்த முடிகிறது. ஞானத்தினையும் அன்பினையும் பெற்றுக்கொண்ட பின்னர் எமது எண்ணங்கள் மிக இயல்பாகவே பிறதிசைகளிளிருந்து விலகி பரமாத்மாவின்மீது ஒருமுகப்படுகிறது. 

ராஜயோகத்தின் ஆரம்பநிலையில் மனமானது மிகவும் தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது. இதுவே நிச்சயமாக மிகச்சிறந்த, இலகுவான, இயல்பான வழிமுறையாகும். மனதின் தொழிட்பாட்டினை நிறுத்துவதென்பது மிகவும் கடினமான ஒரு வேலையாகும். அது தேவையுமற்றது. 

எமது மனமானது தொடந்து வேலைசெய்து கொண்டிருப்பதற்குப் பழக்கப்பட்டுவிட்டது. ஒரு வாகனமானது அதிவேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது நாம் திடீரென்று அதனை நிறுத்துவோமேயானால், அது நிற்கும். ஆனால் இத்தகைய செயல்பாட்டினால் பழுதுகள் உண்டாகிவிடுவதும் சாத்தியமே. அதேபோலவே, தொடந்து ஓடிக்கொண்டிருப்பதற்குப் பழக்கப்பட்டுவிட்ட மனத்தினை திடீரென்று நிறுத்துவோமேயானால், அது மிகவும் சிரமமானதாக இருக்கும் அல்லது அது மிகக் குறுகிய காலத்திற்கே வெற்றியை அளிக்கும். மனமானது மீண்டும் வேறொரு திசையில் சென்று பின்பு மொத்தமாகவே அதனது கட்டுப்பாட்டினை நாம் இழந்துவிடுகிறோம்.  

அனுபவநிலை 

தந்தை எமக்கு மிக அழகான ஒரு முறையினை சொல்லித்தருகிறார். அதாவது, மனதினை ஓடவிடுங்கள். வெறுமனே அது செல்லும் திசையினை கட்டுப்படுத்துங்கள். புத்தியானது ஞானத்தினைக் கொண்டிருக்கும்போது, எமது எண்ணங்களானது சாதாரண பௌதீக செயல்களிலிருந்து விலகி "நான் யார்? எனது ஆதி பண்புகள் என்ன? எனது வீடு எது? எனது தந்தை யார்? அவருடனான எனது உறவுமுறை என்ன? அவரது பண்புகள் யாவை? அவர் எங்கு இருக்கிறார்? அவர் என்ன செய்கிறார்?" போன்ற உயர்ந்த சுயதேடல்சார்ந்த எண்ணங்களைக் கொண்டிருக்கும். 

இவ்வனைத்து கேள்விகளுக்கான விடைகளும் ராஜயோகதியானத்தில் தரப்படுகிறது. ஆத்மாவானது இக்கேள்விகளை மிக ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்குகிறது. ஞானத்தினை நன்றாக கடைந்து இவற்றிற்கான விடைகளை ஆத்மாவானது தெளிவாகக் கண்டுகொள்ளும்போது, அது மிக இயல்பாகவே பௌதீக உலகிலிருந்து சூட்சும உலகிற்கு சென்றுவிடுகிறது. பின்பு தியானம் மிக இயல்பாகவே நடக்கும்.

பரமாத்மாமீதான முழுமுக ஒருமைப்பாட்டினை நாம் அடைந்து மிக மிக ஆழமாகச் செல்லும்போது அவரின் பண்புகளை கண்டறிந்து, அவருடன் எமக்குள்ள பலவிதமான உறவுமுறைகளையும் அனுபவம் செய்கிறோம். உணர்வு நிலையுடைய எண்ணங்கள் இன்னும் தொழிட்படினும் அவையனைத்தும் ஆத்மீக ஞானத்தின் வேறெந்தப் பகுதிகளிலுமல்லாமல் தந்தை ஒருவரிடமே ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கும். 

தியான நிலையின்போது ஆத்மீக ஞானத்தின் பல்வேறு பகுதிகள் எடுத்துக்கொள்ளப்படினும், ஒருமுகப்படுத்தும் நிலையில் நாம் பரமாத்மாவுடன் மட்டுமே தொடர்பில் இருக்கிறோம். எமது எண்ணங்கள் ஓடுவதை நிறுத்தி அமைதியாகின்றன. மனமானது அசைவற்று இருக்கும்போது பரமாத்மா எம்மிடம் பேசுவது கேட்கத் தொடங்கும். ஒருமுகப்படுத்தலின் ஒருகட்டத்தில் பரமாத்மா உண்மையில் எவ்வாறு இருக்கிறாரோ அவ்வாறே எம்மால் அவரை முழுவதுமாக அனுபவம் செய்ய முடியும். 

இதன்போது பரமாத்மாவின் பண்புகளால் நாம் முழுதாக நிரப்பப்படுகிறோம். அவற்றை கிரகித்து நாம் மாற்றமடைகிறோம். பின்பு அவற்றினை அகிலத்திற்கு பரப்பத் தொடங்குகிறோம். 

இப்போது எந்த உணர்வுள்ள நினைவுகளும் எம்மிடம் காணப்படாது. முற்றிலும் அனுபவநிலை நிறைந்திருக்கும். இந்நிலையிலிருந்து மீண்டு வந்ததும் எம்மால் அதை வகைப்படுத்த முடியும். எண்ணங்கள் மீண்டும் ஆரம்பிக்கின்றன. ஆனால் அத்தகைய அனுபவ நிலையில் எவ்வித என்ணங்களுமே காணப்படாது.