Showing posts with label why not a mantra or an object. Show all posts
Showing posts with label why not a mantra or an object. Show all posts

Wednesday, November 12, 2014

ராஜயோக தியானம் : வளர்ச்சிப் படிநிலைகள்


ராஜயோகமானது சமாத்வ (மனஅமைதி அல்லது உள்முகச் சமநிலை) யோகமாகும். பரம தந்தையுடனான தொடர்பில் நாம் இருப்பதனால் ஏற்றத்தாழ்வுமிக்க புற உலகின் செல்வாக்கிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். இந்த தூய்மையற்ற கலியுகத்தின் எதிர்மறையான தாக்கத்திலிருந்து விடுபடுகிறோம். எமது எண்ணங்கள், புத்தி மற்றும் சம்ஸ்காரங்கள் அனைத்துமே பரமாத்மாவின் பண்புகளின் செல்வாக்கின்கீழ் மட்டுமே இருப்பதனால் உள்முகச் சமநிலை ஏற்படுவதுடன் எமது இருப்பின் முழுமையும் அதனைப் பிரதிபலிக்கிறது.

இங்கே விவரிக்கப்பட்டவை தவிர இன்னும் பல யோகமுறைகள் காணப்படுகின்றன. இருப்பினும் அவை அனைத்துமே ராஜயோகத்தினுள் உள்ளடங்குகின்றன. எனவே இந்த அதிமேன்மையான யோகமே எம்மை முற்றுமுழுதாக விருத்தி செய்வதற்கான, ஆத்மாவுக்கான யோகமாகும்.
   
ராஜயோகத்தின் வளர்ச்சிப் படிநிலைகள் பிரதானமாக மூன்று வகைப்படும். 

முதல் நிலை : தியானம் 
ராஜயோகத்தினது அடிப்படையானது பல யோகமுறைகளிலிருந்தும் வேறுபட்டதாகும். இதனது ஆரம்ப நிலை தியானம் என்றழைக்கப்படுகிறது. ஆனால் இந்த தியானத்தில் எவ்வித மந்திர உச்சாடனங்களோ, ஒலிகளோ அல்லது பௌதீக வடிவங்களோ பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக ஞானமே உபயோகிக்கப்படுகிறது. 

தியானத்தின் ஆரம்ப நிலையானது, 'நான் ஓர் ஆத்மா' என்ற நினைவில் மனதை நிலைக்கச் செய்வதாகும். அப்போது புத்தியானது சம்ஸ்காரத்தினுள் ஆழமாகச் சென்று சக்தி வாய்ந்த அமைதி மற்றும் தூய்மையை வெளிக்கொண்டுவரும். இதற்க்கு புத்தி வலிமை பெறவேண்டும். ஞானம் மட்டுமே போதாது. 

இரண்டாவது நிலை : ஒருமுகப்படுத்துதல் 
ஒருமுகப்படுத்துதல் என்றால் மனதை ஒரு எண்ணத்தில் நிலைக்கச் செய்தல். அச்சமயம் மனமானது அத்தகைய எண்ணத்தின் வடிவத்தினைப் பெறுகிறது. தியானத்தின் மூலம் பல்வேறு திசைகளில் செல்லும் எண்ணங்களானது நிறுத்தப்பட்டு மனம் ஒருமுகப்படுகிறது. இதன்போது புத்தியானது கூர்மையாகிறது. ராஜயோகியானவர், பௌதீக வடிவத்தில் தனது மனதினை ஒருமுகப்படுத்துவதை விடுத்து, பௌதீக உருவமற்ற அசரீரியான பரமாத்மாவுடன் இணைப்பினை ஏற்படுத்துகிறார். 

ஆரம்பத்தில் மனதை சில விநாடிகளுக்குமேல் ஒருமுகப்படுத்துவது கடினமாக இருக்கலாம். எண்ணங்கள் இலகுவில் சிதறி பல திசைகளில் மீண்டும் சென்றுவிடும். எனினும் ஒருவினாடி மட்டுமே ஒருமுகப்படுத்த முடிந்தாலும் அது மிகப்பெரிய வெற்றியேயாகும். ஏனெனில் அந்த ஒருவினாடியே தொடர்ந்து ஒருமுகப்படுத்தவேண்டும் என்ற வேட்கையை உருவாக்குகிறது. இதனை சோதனைசெய்து பார்க்கும் காலகட்டமாக எடுத்துக்கொள்ளலாம். இதன்போது கடந்தகால சம்ஸ்காரங்கள், மற்றும் உடலைப்பற்றிய எண்ணங்களும் வந்து இடையூறு விளைவிக்கும். எனினும் நாம் இவற்றை சாதகமாக எடுத்துக்கொண்டு பாதகமான எண்ணங்களை ஞானக்கருத்துகளை மனதில் கொண்டுவருவதன் மூலம் அகற்றமுடியும். 

மூன்றாவது நிலை : உணர்தல் 
ராஜயோக தியானத்தின் முழு நோக்கமுமே பரமாத்மா மீதான முழுமுக ஒருமைப்பாடு அல்லது தொடர்பினை ஏற்படுத்துதல் ஆகும். கடவுளின் உருவம் மற்றும் குணங்களின் மீது ஒருமுகப்படுத்தும்போது தியானத்துக்குத் தேவையான அனைத்து தேவைகளும் பூர்த்தியாகின்றன. இந்த முழுமுக ஒருமைப்பாடானது உணர்தல் என அழைக்கப்படுகிறது. 

வேறு சில யோகங்களை பயிற்சி செய்யும் யோகிகள் கட்டாயத்தின் அடிப்படையில் எதிர்மறையான எண்ணங்களை வெளியேற்றி மனதினை வெறுமையாக வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள். இத்தகைய முறையில் மனமானது தற்காலிகமாகவே காலியாக இருக்கும்.  அத்துடன் எதிர்மறையான எண்ணங்களுடன் சேர்த்து நல்ல எண்ணங்களும் வெளியேற்றப்படுகின்றன. தூய எண்ணங்கள் ஆத்மாவுக்கு ஊட்டச்சத்து போன்றவை. இவை ஞானத்தினை நடைமுறையில் உணர்த்துகின்றன. மனமானது தூய சக்திவாய்ந்த எண்ணங்களின் ஓட்டத்தினை அனுபவம் செய்யும்போது, ஆத்மாவானது தூய குணங்களின் அனுபவத்தில் இருப்பது சாத்தியமாகிறது. 

மந்திரம் அல்லது பொருளை உபயோகித்தல்
ஒரு மந்திரத்தையோ அல்லது பொருளினையோ பயன்படுத்தி தியானம் செய்யுமிடத்து எம்மால் அதிக பட்சமாக, அந்த மந்திரத்தின் மீதோ அல்லது பொருளின்மீதோ தான் மன ஒருமுகப்பாட்டை அடையமுடிகிறது. இதனால் நாம் மிக நிச்சயமாக பரமாத்மாவுடனான தொடர்பை அனுபவம் செய்வததிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். இத்தகைய முறைகள் மூலம் எமது எண்ணங்களானது, எமது பௌதீக இருப்பு சார்ந்த, எமக்கு இதுவரை காலமும் துன்பத்தை வழங்கிய அல்லது குற்ற உணர்வுகளை ஏற்படுத்திய எண்ணங்களிலிருந்து விலகிவிடுவதனால் நாம் ஓரளவு மன அமைதியை பெறமுடியும். இருப்பினும் எமது எண்ணங்கள் குறித்த மந்திரத்தை அல்லது பொருளை நோக்கி இருக்கும் வரையில் மட்டுமே எம்மால் தியானத்தினை செய்யமுடிகிறது. எனவே தியான காலம் முடிவடைந்த பின்னர் நாம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுகிறோம்.

ராஜயோக தியானமானது வெறுமனே மன ஒருமைப்பாட்டிற்கான பயிற்சியாக அல்லாமல், இறைவனுடனான தொடர்பினை பெறுவதை பிரதான நோக்கமாகக் கொண்டது. இறைவனுடன் எவ்வாறு தொடர்பினை ஏற்படுத்துவது என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்.