தூய்மையற்ற சம்ஸ்காரங்கள், திரும்பத் திரும்ப செய்யப்படுவதன் மூலம், தம்மை வலுவானதாக்க அனுமதிக்கப்படும் போது, உள்ளுணர்வானது படிப்படியாக பௌதீக புலன் உணர்வுகளின் வலிமையான செல்வாக்கிற்கு வழிகொடுக்கத் தொடங்குகிறது. சக்திமிக்க இப்புலன்களின் பலமான கவர்ச்சியினால், உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, எமது சொந்த புத்தியின் தீர்மானங்களையே ஒதுக்கித் தள்ளும் நிலைக்கு ஆளாகிறோம். இதன் விளைவாக, அதே சூழ்நிலை திரும்பவும் வரும்போது, ஏற்கனவே பலவீனமான மனச்சாட்சியினது செல்வாக்கு, முன்னரைவிட இப்போது இன்னும் குறைவாகவே இருக்கும். காலப்போக்கில் அது பேசுவதை முற்றாக நிறுத்திவிடுகிறது. மனச்சாட்சியானது அலட்சியம் செய்யப்படுகையில், அறியாமையின் வழிச்செல்வது தவிர்க்க முடியாததாகிறது.
இதனால், அநேக சமயங்களில் சரியானதை தவறானதிலிருந்து பிரித்தறிவதில் உறுதியற்ற அல்லது நிச்சயமற்ற நிலையை காண்கிறோம். சரி, தவற்றின் இருப்பை மறுதலிக்கக் கூட செய்கிறோம். சுயநலமான மற்றும் சுயநலமற்ற செயல்களை வேறுபடுத்திப் பார்க்கமுடியாதளவு புத்தியானது தெளிவற்று இருப்பதால், நெறிபிறழ்ந்த நிலை தழைக்கிறது.

சுயத்தில் இருந்து மனநிறைவு காண முடியாமல், ஆத்மாவானது தனது முழு கவனத்தினையும் பௌதீக ஆதாரங்களிருந்து பெறப்படும் தற்காலிக இன்பங்களை நோக்கி திருப்புவதனால், அது விரைவில் திருப்தியின்மையையும், வெறுமையையும் அனுபவம் செய்கிறது. இத்தகைய பலவீனமான நிலையில் ஆத்மாவானது, மனதுக்கு ஆறுதலளிக்கும் எந்தவொரு ஆதாரத்தையும் இறுகப் பற்றிப் பிடித்துவிடுகிறது. நோக்கமானது தரம் தாழ்ந்து புலன் திருப்தியினை நோக்கி செல்கையில், இப் பொறிக்குள் சிக்கிய ஆத்மா தனது திருப்தியின்மையை போக்குவதற்கு மேலும் மேலும் அதிக இன்பங்களை தேடி அலையத் தொடங்குகிறது.
தற்காலத்தில் எமது மனமானது புலன்களிடம் முழுமையாக அடிமையாகிவிட்டதனால், எம்மால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. எவ்வளவுக்கெவ்வளவு எமது கவனத்தை சுயத்திலிருந்து விட்டு விலகுகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு துன்பத்திலும் துயரத்திலும் சிக்கித் தவிக்கிறோம். இன்று உலகம் முழுவதிலும் இத்தகைய அகமுரண்பாடுகளை வெகு சாதாரணமாகக் காணமுடியும்.
No comments:
Post a Comment