
உயிருள்ளவை என்பது, தனது இருப்பினது விழிப்புணர்வைக் கொண்டதும், சுயமாக எண்ணங்களை உருவாக்கக் கூடியதுமாகும். அந்த எண்ணங்களானது உணர்வுகளை, உணர்ச்சிகளை மற்றும் திறன் பற்றிய விழிப்புணர்வு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும். இவற்றால் நல்லதை கெட்டதிலிருந்தும், உண்மையை பொய்மையிலிருந்தும், யதார்த்தத்தை மாயையிலிருந்தும் பகுத்துணர முடியும். அதுமட்டுமல்லாமல் ஒரு தனித்துவமான ஆளுமையையும் கொண்டிருக்கும். இவை ஒவ்வொன்றும், அவற்றின் ஆளுமையை தீர்மானிக்கும் பழைய அனுபவங்களின் தொகுப்பை, தம்முடன் எடுத்துச் செல்வதனாலேயே இத்தகைய தனித்துவம் உருவாகின்றது. இதனாலேயே ஒருவரின் ஆளுமை மற்றையவரினது ஆளுமையிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கக் காண்கிறோம்.
இவற்றிற்கு நினைவாற்றலும் உண்டு. அதனாலேயே உறவுமுறைகள் உருவாகின்றன. பிறருடனான சந்திப்பு எமது நினைவில் இருக்கும்போது உறவுமுறை வளர்கிறது. இவை ஆசைகளைக் கொண்டவை. மட்டுப்படுத்தப்பட்ட (பௌதீக) பொருட்களின் மீதான ஆசைகள், மன சீரழிவுக்கு வழிவகுக்கிற அதே நேரம், உயர்ந்த ஆன்மீக, பரந்துபட்ட பொதுநல ஆசைகள் ஆத்மாவின் அதி சிறந்த அதன் மூல நிலைக்கு இட்டுச் செல்கிறது.
இவ்வாறாக, உயிருள்ளவையின் குணங்களை உயிரற்றவையினுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இவற்றிற்கிடையேயான மிகப்பெரிய வித்தியாசத்தினை உணரலாம். இதேபோன்று எமது சரீரத்தை வேறான ஒரு உபகரணமாகக் கருதினால், எமக்குள் தீர்மானிப்பது அல்லது பகுத்துணருவது எது? எமது பௌதீக அங்கங்களான கண், காது, கை, கால் ஏன் தலையிடம் கூட இத்தகைய திறன் இருக்க முடியாது. எனவே இந்த பௌதீக அங்கங்களைத் தாண்டி எதுவோ ஒன்று தான் இவற்றைச் செய்கிறது என்பது புலனாகிறது.
பௌதீக உலகில், பல உபகரணங்களை உபயோகித்து நாம் காரியங்களை ஆற்றும் போதும், நாம் அவற்றிலிருந்து முற்றாக வேறுபட்டவர்களாவோம். உதாரணத்திற்கு, ஒரு கத்தியை எடுத்து எமது கரங்களால் காய்கறிகளை வெட்டுகிறோம், என்று வைத்துக்கொண்டால், இந்த முழு செயல்பாட்டிலும் கத்தி எந்தவித தீர்மானத்தையும் மேற்கொள்வதில்லை. நாம் தவறுதலாகக் கையை வெட்டிக்கொண்டால், அச்சமயம் கத்தியோ அல்லது கைவிரலோ, உணர்வுரீதியாக எந்த சலனத்தையும் அடைவதில்லை. ஏனெனில் அவை வெறும் கருவிகள் மட்டுமே.
கத்தியை ஒரு உபகரணமாகப் பார்ப்பது எமக்கு இலகுவானதாகும். ஆனால் எமது கரங்களுடன் நாம் மிகவும் இணைக்கப்பட்டு இருப்பதனால், அதனை எம்மிலிருந்து வேறாக, ஒரு கருவியாகக் கருதுவது எமக்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. எமக்கு இந்த உடலில் இரண்டு கரங்களைப் பெற்றிருக்கிறோம், தவிர இந்த உடல் உள்ளவரை எமக்கு அவ்விரண்டு கைகளே இருக்கப் போகிறது. இதனால் அவற்றுடன் மட்டுமலாது, இந்த முழு உடலுடனுமே மிக நெருங்கிய, செறிவான, ஆழமான, தனிப்பட்ட தொடர்பை / பற்றினை ஏற்படுத்தியதனால், எமது சுய அடையாளத்தை முழுவதுமாக மறந்து விட்டோம்.

இந்த உடலுடன் சம்பந்தப்படுத்தி எம்மை அடையாளப்படுத்துவது, மிகவும் தவறான ஒரு வழிமுறையாகும். இதனை பிறர் நம் மீது திணிப்பது மட்டுமல்லாது, நாமே எமக்கு இப்பாரிய தவறை செய்கிறோம். எம்மை இந்த உடலுடன் சம்பந்தப்படுத்திக் கொள்வதனால், எமது பிரக்ஞையில் இவ்வுடல் சார்ந்த மட்டுப்படுத்தப்பட்ட அடையாளங்களான நிறம், மதம், மொழி, இனம், கலாச்சாரம் போன்றவையே எமது சுயத்தின் அடையாளங்களாகப் பதியப்பட்டுவிடுவதால், பிரக்ஞையானது பிற சாத்தியக் கூறுகளிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டு விடுகின்றது.
மிகவும் அருமையாகவும், உபயோகமாகவும் உள்ளது....... மேன்மேலும் உங்கள் சேவை சிறந்து விளங்க வாழ்த்துக்கள்........
ReplyDelete