Monday, November 3, 2014

ராஜயோக தியானம் : குறிக்கோள்

'ஓம் சாந்தி' என்பதன் அர்த்தம், 'நான் ஓர் அமைதியான ஆத்மா' என்ற விழிப்புணர்வு, என்பதை முன்னமே பார்த்திருந்தோம். ராஜயோகத்தினது சாராம்சம் இதுவேயாகும். ராஜயோகமானது பரமதந்தையினால் மானிட கருவியாகிய பிரஜாபிதா பிரம்மாவினூடாக கற்பிக்கப்பட்டதாகும்.

ராஜயோகம் என்பது பல நூற்றுக்கணக்கான வருடங்களாக வழக்கத்தில் இருந்த போதிலும், கீதையை போதித்தவரும் கீதையின் கடவுளுமாகிய இறைவனால் பயிற்றுவிக்கப்பட்ட ஆதியான ராஜயோகமானது மனிதகுலத்திலிருந்து அழிந்துவிட்டது.  எனவே தான் எம்மால் அதியுயர்ந்த இணைப்பினை, உண்மையான யோகத்தினை அனுபவம் செய்யமுடியாமல் இருக்கின்றது. கீதையில் இறைவனால் வழங்கப்பட்ட "எப்போதெல்லாம் அதர்மம் தழைத்தோங்குகிறதோ அப்போது, அதர்மத்தினை அழித்து தர்மத்தினை நிலைநாட்ட நான் அவதரிக்கிறேன்.  ராஜயோகத்தினை கற்பிக்க வருகிறேன்." என்ற வாக்குறுதியின்படி இந்தக் கல்வியானது அவரால் மீண்டும் தரப்படுகிறது. 

குறிக்கோள்: ராஜயோக கல்வியினது நோக்கம் சம்பூர்ணநிலையை அடைதலாகும். இது வெறுமனே ஒரு சிறிய மாற்றத்திலோ அல்லது ஒருமனிதனை சற்றே மேம்பட்ட நிலைக்கு கொண்டுசெல்வதிலோ அல்ல. மாறாக இதன் குறிக்கோளும், வரைவிலக்கணமுமே முழுதான பூரணத்துவமாகும். எனவேதான் இது அனைத்து விதமான கல்வியை விடவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தெய்வீகத்தன்மை நிறைந்ததாக இருந்த ஆத்மாவானது, தற்போது அதனை இழந்துவிட்டது. ஆனால் அதனை மீண்டும் ஆத்மாவால் பெற்றுக்கொள்ள முடியும். எனவே ராஜயோகமானது ஆத்மாவுக்கானது. இந்த தியான முறையினால் ஒருவரின் நடத்தையில், குணத்தில், சம்ஸ்காரங்களில் மாற்றம் ஏற்படுகின்றது. இதன் மூலம் பல காலமாக ஆத்மாவில் பதியப்பட்டு வந்த தீய பண்புகள் அகற்றப்படுவதனால், ஆத்மாவினது ஆதியான தெய்வீகத்தன்மை மீண்டும் பிரகாசிக்கத் தொடங்குகிறது.

முறை: பரமாத்மாவுடனான இணைப்பே, ராஜயோகத்தினது குறிக்கோளாகிய சம்பூர்ண நிலையை அடையும் வழிமுறையாகும். மனிதர்களுடனான அல்லது தீர்க்கதரிசிகளுடனான அல்லது இறைதூதர்களுடனான தொடர்பின் மூலம் நாம் எமது அதியுயர்ந்த நிலையை அடைய முடியாது.  மாறாக, பரமாத்மாவுடனான தொடர்பின் மூலம், எமது குறைபாடுகளை நீக்குவதற்கான வலிமையை பெற்றுக்கொள்வதுடன், பரிபூரண நிலையை அடைவதற்குத் தேவையான அனைத்து தெய்வீக குணங்களை கிரகிக்கக் கூடிய ஆற்றலினையும் பெற்றுக்கொள்கிறோம்.

சம்பூர்ண நிலை (கர்மாதீத் நிலை)

கர்மாதீத் நிலை என்பது, விகாரங்கள் எதுமற்ற, திவ்யகுணங்கள் நிறைந்த, வன்முறையற்ற, தெய்வீக பண்புகள் நிறைந்த நிலையாகும். அதியுயர் ஒழுக்க நெறிகளை பின்பற்றி ஆத்மாவானது இந்த நிலையை அடைகிறது. பரம தந்தையினால் கற்பிக்கப்படும் ஞானத்தினாலும், தியான முறையினாலும் இது சாத்தியமாகிறது.

யோகம் என்றால் இணைப்பு என்று அர்த்தம். எனவே ராஜயோகம் என்றால் பரமாத்மாவுடனான இணைப்பு என்று அர்த்தம். இது அனைத்து தொடர்புகளையும் விட அதியுயர்ந்த தொடர்பு என்றும் அர்த்தமாகிறது. இந்த யோகத்தின் மூலம் ஆத்மாவானது தான் இழந்துவிட்ட தனது அதியுயர் ஸ்தானத்தினை திரும்பப் பெறுகிறது. எமது மனதிற்கு, எமது புலன்களுக்கு, எமது நடத்தைகளுக்கு என்று, எமக்கு நாமே அதிபதியாவதால் எமக்கு விருப்பமான பாதையில் எம்மை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. ஆத்மாவானது புற நிகழ்வுகளாலும், புறக் காரணிகள் மற்றும் மனிதர்களாலும் ஆட்டுவிக்கப்பட்டு திசைதிருப்பப்படாமல், தனது இலக்கினை தெளிவாகக் காண்கிறது. அதுமட்டுமல்லாமல் அதனால் தனது குறிக்கோளை நோக்கி திடசங்கல்ப்பத்துடன் சென்று இறுதி இலக்கினை இலகுவாக அடையமுடிகிறது.

ராஜயோகமானது அதியுயர்ந்ததாக இருக்கும் அதேவேளையில், மிகவும் சிரமாமானதாகவும் உள்ளதாக சில சமயங்களில் எம்மால் உணரப்படுகிறது. எதுவுமே உண்மையிலிருந்து அப்பால் செல்லமுடியாது. ஏனெனில் ராஜயோகமானது எமது உண்மை நிலையினது இயல்பான விழிப்புணர்வாகும். இது எவ்வாறு சிரமாயிருக்க முடியும்? ராஜயோகமானது வெகு இயல்பானது. தந்தையுடனான அன்புநிறைந்த தொடர்பு. அன்பான தந்தையுடனான தொடர்பானது எவ்வாறு சிரமமானதாக இருக்க முடியும்?

எனினும் சரியான புரிந்துணர்வு அல்லது தெளிவான ஞானம் இல்லாத காரணத்தினால் சுய அடையாளத்தை பற்றிய மற்றும் எமது தந்தையைப் பற்றிய குழப்பங்கள் உருவாகின்றன. அப்போது யோகம் சிரமமாகிறது. ஆனால் எமக்கு இவற்றினைப்பற்றி தெளிவான அறிமுகம் இருக்கும் போது எம்மால் அதன் அடிப்படையில் தொடர்பினை இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. இந்த உறவுமுறையில் நன்மைகளை அனுபவம் செய்யும்போது தொடர்பானது ஆழமாகி சம்பூர்ண இணைப்பு மற்றும் நல்லிணக்கம் உருவாகி, ஆத்மாவானது பரமாத்மாவினது பிரதியாக ஆகிறது. பரமாத்மாவின் பண்புகளுடன் அது மீளுருவாக்கம் அடைகிறது.





No comments:

Post a Comment