Friday, October 10, 2014

ராஜயோக தியானம்: வாகனமும் அதன் சாரதியும்


ஒரு வாகன சாரதியானவர், முழுதான விழிப்புணர்வுடன் இருந்தால் மாத்திரமே, அவரால் தனது வாகனத்தை சரியாக பயன்படுத்தி, சென்று சேரவேண்டிய இடத்தை அடையமுடியும். இதே ஒப்புவமையைக் கொண்டு எம்மை அவதானிக்கும் பொழுது, கட்டுப்பாட்டில் வைத்திருத்தலுக்கும், ஓடிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுதலுக்குமான மிகப்பாரிய வித்தியாசத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

வாகன சாரதியானவர், தான் செய்பவற்றின் விழிப்புணர்வு இருக்கும் வரை அவரால் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது திடீரென்று அவரது கவனம் தவறுமானால், மனதை ஒருகணமேனும் வேறெங்காவது அலைந்து திரிய விடுவாராயின், அவர் பாதையிலிருந்து விலகி சரிவில் விழுந்துவிடுவார். 

மக்கள், தாம் என்ன செய்கிறோம் என்பதனை மறந்துவிடும் போது விபத்துக்கள் நடக்கின்றன. இதேபோலவே, யாராவது தமது சுய கட்டுப்பாட்டை ஒரு கணமேனும் இழப்பார்களாயின், அங்கே (உதாரணத்துக்கு சடுதியான கோபம்) விபத்து நடைபெற்று தனக்கும் அதில் சம்பந்தப்படுபவர்களுக்கும் துன்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. விபத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட சேதமானது, அதனை  பார்ப்பவர்களையும் வருத்தமடையச் செய்துகிறது.

எனவே ஆத்மாவுக்கும்(சாரதி) உடலுக்கும்(வாகனம்) இடையே புரிந்துணர்வும் நல்லிணக்கமும் மிகவும் அவசியமாகும். ஒரு சாரதியானவர் எவ்வாறு விழிப்புணர்வுடனும், தனது வாகனத்துடன் நல்லிணக்கத்துடனும் இருக்கிறாரோ, அதேபோல் ஆத்மாவும் தனது உடலின் முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நாமோ விழிப்புணர்வுடன் இல்லாது தூங்கிவிட்டோம். அதனாலேயே பல விபத்துகள் நடந்துவிட்டன. இதனால் எமக்கும், எம்மைச் சூழவுள்ளவர்களுக்கும், ஆழ்ந்த துக்கம் ஏற்படுவதற்கு காரணமாகிவிட்டோம். இப்போது இந்த விழிப்புணர்வு காரணமாக,  சாரதி விழித்தெழுந்து, வாகனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கொண்டுவந்து, அதனை சரியான முறையில் உபயோகிக்கத் தொடங்குகிறார்.

கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருத்தல்: நான் ஓர் ஆத்மா என்ற உணர்வின் மூலம்,  புலன்களின் உதவியைப் பெற்று, நல்லதை தீயதிலிருந்தும்,  தேவையானதை தேவையற்றதிலிருந்தும் தேர்ந்தெடுக்க முடிவது மட்டுமல்லாது, அனைத்தையும் சாதகமான செயல்களாக ஆக்குவதன் மூலம் பிறருக்கும் உதவி, எமது பிரக்ஞையையும் உயர்வாக வைத்திருக்க முடிகிறது. தவிர, எம்மைப் பற்றிய விழிப்புணர்வில் இருப்பதனால், எமது பௌதீக புலன்களின் அதிபதியாக ஆகிறோம்.

இதுகாலவரை எமது புலன்களின் மீது, எமக்கு மிகக் குறைந்தளவு கட்டுப்பாடே இருந்து வந்துள்ளது. இதனாலேயே எமது கண், காது போன்ற புலனங்கங்கள், பல வருடங்களாக எமது மனத்தை அடிமையாக்கி, பல்வேறுவழிகளில் இழுத்துச்சென்று, தமது விருப்பப்படி ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன. சரீரத்தினை முன்னிலைப்படுத்தி ஆத்மாவை புறந்தள்ளுவது, குதிரைக்கு முன்பாக வண்டியை கட்டுவது போலாகும். ஞானமே சக்தியாகும். எனவே இந்த ஞானத்தின் மூலம், எம்மால் இந்த சரீரத்தின் மீது உண்மையான இறையாண்மையை மீளவும் நிலைநாட்ட முடியும்.






3 comments:

  1. திருக்குறள் 262 டேய் செத்து தொலஞ்சிருவடா சிவயோகம் ராஜயோகம் சிவராஜயோகம் என்பான் செய்யாதே
    https://www.youtube.com/watch?v=zaa0W7AlE_U

    ReplyDelete
    Replies
    1. அன்பான சகோதரரே, நீங்கள் தந்த வீடியோ லிங்க்கில் உள்ள வீடியோவைப் பார்த்தேன். அதில் பேசியுள்ள மதிப்பிற்குரிய சந்நியாசி அவர்கள் மிக அருமையாக பேசியுள்ளார். அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால்.... ஞானமும், யோகமும் கற்றுக் கொள்வது மற்றும் அதைப் பயிற்சி செய்வது எல்லோராலும் முடியாது. அதைச் செய்ய ஒருவன் பிறந்து வர வேண்டும். அவன் பல பிறவிகளாக புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவர் கூறும் பல பிறவிகளாக புண்ணியம் செய்தவனாக வழி வழியாக பக்தி, தானம், தர்மம் செய்தவனாக நான் ஏன் இருக்க்க் கூடாது? ஆகவே அவர் கூறுவது முற்றிலும் சரியானது. அந்த தனித்தன்மை வாய்ந்தவனாக நான் ஏன் இருக்கக் கூடாது. நான் இந்த பிரம்மாகுமாரிகளின் இராஜயோக தியானப் பயிற்சி செய்திருக்கிறேன். இது மூச்சுப் பயிற்சியோ, உடல் பயிற்சியோ (பிராணயாமம், ஹடயோகம்) கிடையாது. இது முற்றிலும் மனப் பயிற்சி இதைச் செய்ய வயதோ, உடலோ தடையல்ல. இதை யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம். ஆகயால் தயவு செய்து இதைப் பயிற்சி செய்துப் பார்த்துவிட்டு தங்கள் கருத்தை தெரிவிக்கவும். இந்த இராஜயோக தியானமானது உங்களின் அருகாமையில் உள்ள பிரம்மாகுமாரிகளின் இராஜயோக தியானப்பயிற்சி மையங்களில் இலவசமாக கற்றுத்தரப் படுகிறது. உங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி.

      Delete
  2. ராஜ யோக தியானம் பற்றி மக்களிடம் இவ்வாறு பல தவறான அபிப்பிராயங்கள் உள்ளன. இதற்கும் பிராணாயமத்துக்குமோ அல்லது ஹடயோகத்துக்குமோ எவ்வித சம்பந்தமுமில்லை. பலரது இத்தகைய குழப்பங்களை இந்தத் தொடர் (http://bkgowri.blogspot.sg/p/blog-page.html) முடிந்தளவு தெளிவாக்கும் என நினைக்கிறேன். வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாசித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete