Thursday, October 2, 2014

வன்முறையின் ஐந்து வடிவங்கள்


வன்முறை இன்றைய சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் பரவியுள்ளது. போர்கள், மோதல்கள், பயங்கரவாத தாக்குதல்கள் முதல் தனிப்பட்ட குற்றங்கள் வரை, வன்முறை செயல்கள் அதிகரித்துச் செல்வதை நாம் இந்த நாட்களில் வேதனையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நாம் இந்த உலகில் காணும் அனைத்து விதமான வன்முறைகளும், எம் ஒவ்வொருவர் உள்ளேயே இருக்கும் வன்முறைகளின் வெளிப்பாடே ஆகும்.  

வன்முறை நடத்தைக்கு வழிவகுக்கும் சமூக, அரசியல், பொருளாதார, உளவியல் காரணிகளை இனங்கண்டு கொள்வதற்கு இந்நாட்களில் அதிகம் ஆய்வுகள் நடந்து வருகின்றன. 

வறுமை, வேலையின்மை, கல்வியறிவு இல்லாமை, மது அருந்துதல், போதைப் பழக்கம், பாலியல் வக்கிரம், பணம், அதிகாரம் என்று பல காரணிகள் வன்முறை நோக்கத்திற்கான அடிப்படைக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஆனால் இன்று வன்முறை மனித பிரக்ஞையில் மிகவும் ஆழமாக வேரூன்றி காணப்படுகின்றது.

வன்முறையானது விகாரங்களிலிருது உருவானதாகும். ஆன்மாவானது தனது உண்மையான அடையாளத்தை மறந்து சரீர உணர்வில் வரும்போது, அவை விகாரங்களின் செல்வாக்கின் கீழ் வருகின்றன. அப்போது அது தனது உண்மையான பண்புகளான அமைதி, மகிழ்ச்சி, அன்பு மற்றும் சக்தி என்பவற்றை மறந்து வன்முறைகளில் ஈடுபட ஆரம்பிக்கின்றது.

மனிதர்களிடையே காணப்படும் ஐந்து பிரதான விகாரங்களாவன: காமம், கோபம், பேராசை, பற்று மற்றும் அகங்காரம் என்பனவாகும். அனைத்து விகாரங்களும் எம்மில் அவ்வப்போது தோன்றும் ஆசைகளுடன் தொடர்புபட்டுள்ளன. அவை அனைத்து ஆசைகளையுமே பூர்த்தியாகுவது போன்றதொரு மாயையை எங்கள் முன் வைக்கின்றன. ஆனால் இவற்றின் மூலம் கிடைக்கும் சந்தோசமானது மிகச் சொற்ப காலத்திற்கே நிலைத்திருக்கும்.

காமம் - இதுவே மனித ஆன்மாவின் மிகக் கொடிய எதிரி என்று கருதப்படுகிறது. காமம் ஆத்மாவின் அனைத்து தூய்மையையும், சக்தியையும் அழித்து விடுகிறது. காமம் என்பது வெறும் உடல் இன்பங்களை சார்ந்தது மட்டுமல்ல. பணம் மற்றும் அதிகாரம் மீதுள்ள மோகத்தினால் மக்கள் வாழ்நாள் முழுவதும் அலைந்து திரிகின்றனர். இது பிறரிடமிருந்து ஆதரவு, நிறைவு, மகிழ்ச்சி மற்றும் சுய மதிப்பு போன்றவற்றை தொடர்ந்தும் பெற்றுக்கொண்டிருக்க விரும்பும் ஒரு துன்பமிக்க போதையாகும். காமம், ஆத்துமாவின் அனைத்து சக்திகளையும் அழிப்பது மட்டுமல்லாமல் முடிவில்லாத ஆசைகளின் சுழலில் எம்மை சிக்க வைத்துவிடுகின்றது. ஒருவரை மிகவும் சுயநலவாதி ஆக்குவதோடல்லாமல் ஆன்மாவில் உள்ள அனைத்து உணர்திறன், தெளிவு, அன்பு மற்றும் உண்மைத்தன்மையையுமே இல்லாமல் செய்துவிடுகின்றது.

கோபம் - இது தன்னையும்  எரித்து பிறரையும் எரித்துவிடும் பெரு நெருப்பாகும். எமது ஆசைகள் அல்லது எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகாத சூழ்நிலைகளில் எமக்குக் கோபம் வருகின்றது. கோபம் எமது பகுத்துணர்தல் மற்றும் முடிவெடுக்கும் சக்தியை மழுங்கடிக்கிறது. நாம் கோபமாக இருக்கும்போது பகுத்தறிவுடன் சிந்திக்க, செயல்பட முடியாது. நாம் முற்றிலும் எதிர்மறை உணர்வுகளின் கட்டுப்பாட்டினுள் வரும்போது அதி உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளை அல்லது செயல்களை பிரயோகித்து மற்றவரை நம்முடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் கட்டாயப்படுத்துகிறோம். கோபம் எப்போதும் ஒரு ஆத்துமாவை பிறரின் நடத்தை மற்றும் சூழ்நிலைகளுக்கு அடிமைப்பட்ட வைத்துவிடுகிறது. உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் போர், பயங்கரவாதம், கொலை போன்ற பெரும் அழிவுகளுக்கு இது எதுவாய் அமைகிறது.

பேராசை - தீராத ஆசைகள் என்றும் சொல்லலாம். ஒரு பேராசைமிக்க நபரிடம் பல சொத்துக்கள் நிறைந்து இருந்தாலும், அவர் எப்போதும் ஏழையாகவும், வெறுமையாகவுமே உணர்வார். ஏனெனில் பேராசையானது ஒரு மனிதனை மென்மேலும் சேர்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டி ஆசைகளின் பின்னால் தொடந்து ஓடச் செய்வதனால், இருக்கும் வாழ்க்கையை சரிவர அனுபவிக்க முடிவதில்லை. பேராசையானது, அநீதி மற்றும் ஊழலுக்கு வழிவகுக்கிறது. இது மனிதனை மகிழ்ச்சியற்றவனாக்குவதுடன் நேர்மையற்ற, பயந்த மற்றும் பொறுப்பற்றவனாகவும் ஆக்குகிறது. பேராசையுள்ள மனிதன், சக மனிதனை மட்டுமல்லாது இயற்கையையும் சுரண்ட ஆரம்பிக்கிறான். இது பரந்தளவில் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய ஏற்றத்தாழ்வுக்கு மட்டுமல்லாது பேரழிவுக்கும் வழிவகுக்கும். 

பற்று - இது ஒரு நுட்பமான ஆனால் ஆழமான விகாரம் ஆகும். பல ஞானிகள் பற்றே அனைத்து துன்பங்களுக்கும் ஆணிவேர் என சுட்டிக்காட்டினார். பற்றானது, பிறரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவேண்டும், தமது மதிப்பை உணர வேண்டும் என்பதிலிருந்து தொடங்குகிறது. இது ஒருவரை சுயநலவாதி ஆக்குவதுடன் தவறான ஆதாரத்தை பெறச்செய்து, சுய அடையாளத்தையே அழித்துவிடுகிறது. இது 'என்னுடையது' என்ற வலையில் சிக்க வைத்து எதை விரும்புகிறார்களோ அதனை இறுகப் பிடித்து வைத்திருக்கச் செய்கிறது. பற்று ஒருவனை அற்ப சுயநலவாதி ஆக்குவதோடல்லாமல் குறுகிய எண்ணம் கொண்டவனாகவும் ஆக்கிவிடுகிறது.

அகங்காரம் / தன்முனைப்பு - இதுவே ஆத்மாவின் மிகமிக நுட்பமான எதிரியாகும். தன்முனைப்பின் செல்வாக்கின் கீழ் இருக்கும் ஆத்மா தனது உண்மையான சுய மரியாதையிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு விடுகிறது. இது எம்மைப் பற்றிய தவறான, கற்பனையான ஒரு உருவத்தை உருவாக்கி விடுகிறது. தன்முனைப்பு அதிகமுள்ள நபர், எப்போதும் பாதுகாப்பற்ற தன்மையை உணர்வது மட்டுமல்லாது பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்கும் சதா முயல்வார். ஏதாவது எம்மை காயப்படுத்துகிறது என்றால் அங்கு தன்முனைப்பு இருக்கிறது என்று அர்த்தம். தன்முனைப்புள்ள ஒருவர் பாராட்டுதல்களாலும், தூற்றுதல்களாலும் வெகு இலகுவில் பாதிக்கப்படுபவராக இருப்பார். தன்முனைப்பானது ஒருவரை பொய்யான கற்பனையில், ஆழமான மாயையினுள் வைத்திருக்கிறது. இது ஒருவரினுள் குழப்பம், வெறுப்பு, மோதல்கள் மற்றும் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தி மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடுகிறது. 

இன்று உலகில் நடக்கும் அனைத்து கெட்ட விஷயங்களையும் வன்முறையின் இந்த ஐந்து வடிவங்களில் அடங்குவதை காணலாம். ஆத்மா, தனது உண்மையான குணங்களான தூய்மை மற்றும் அமைதி தன்மையை புரிந்து கொள்ளும்போது ஏனைய ஆத்மாக்களும் அவ்வாறே தெய்வீக தன்மையானவை என்ற புரிந்துணர்வு ஏற்படும். ஆத்மா, தனக்குள் முரண்பட்டுக் கொள்ளும்போது இந்த உலகம் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் இருக்கவும் உதவுகின்ற நித்திய ஆத்மீக விதிகளையும் மீறிவிடுகிறது.

அகிம்சையையை முதன்மையான தர்மமாகக் கொண்டு புதிய உலகை, பரமாத்மா மீண்டும் ஸ்தாபனை செய்துகொண்டிருக்கிறார். அவரே எம்மை இந்த தீய சக்திகளிருந்து மீட்டு வருவதற்காக உண்மையான ஞானத்தை அளித்துக் கொண்டிருக்கிறார். ஆன்மீக கொள்கைகளை பின்பற்றி விகாரங்களிளிருந்து விடுபடுவதன் மூலமே வன்முறையை முற்றாக அழிக்க முடியும். இது பரமாத்மாவுடன் நேரடியான தொடர்பை ஏற்படுத்தும் ராஜயோகம் மூலம் சாத்தியமாகிறது.



No comments:

Post a Comment