Wednesday, October 8, 2014

ராஜயோக தியானம்: ஆத்மா


எம்மால், இந்த பௌதீக வரைமுறைகளைத்தாண்டி இருக்கும் விடயங்களை கூட அனுபவம் செய்ய முடிகிறது. ஆகையால், நான் என்பது, இந்த பௌதீக உருவமல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. உதாரணமாக இந்த உடலால் மீண்டும் குழந்தைப் பருவத்திற்கு செல்ல முடியாது, ஆனால் என்னால் முடியும். எமது மனமானது, ஒரு வினாடி நேரத்திலேயே எமது இளமைப் பருவ நாட்களுக்குச் சென்றுவிட முடியும். அதேபோல், எதிர்காலத்தை நோக்கியும் ஒரே வினாடியில் சென்று, சாத்தியமான முதுமைப் பருவ நாட்களை காண முடியும். இவ்வாறாக, எம்மால் இந்த மூன்று காலங்களுக்கும் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஒரே வினாடியில் பயணித்துவிட முடிகிறது. அதுமட்டுமல்லாமல் எவ்வளவு தூரத்தையும் கூட ஒரே வினாடியில் கடந்துவிட முடியும்.  நினைத்த மாத்திரத்திலேயே எமது எண்ணங்கள் எம்மை, அமெரிக்காவுக்கோ அல்லது ஆஸ்திரேலியாவுக்கோ ஒரே நொடியில் அழைத்துச் சென்றுவிடும். எங்கே ஈர்ப்பு இருக்கிறதோ, அங்கே எண்ணங்கள் எம்மை அழைத்துச் செல்கின்றன. இவை அனைத்தும் நிகழ்கையில் எமது உடலோ, ஓர் குறித்த இடத்திலேயே இருக்கிறது. எனவே இந்த உடலானது பௌதீகமானது. ஆனால் நாம் அப்படியல்ல. எம்மால் தூரம், நேரம் போன்ற பௌதீக வரைமுறைகளைத் தாண்டி செல்ல முடியும்.   

அடுத்து, இந்த சரீரம் வாழ்வதற்குத் அவசியமான உண்ணுதல், குளித்தல் போன்றவை போலவே, நாம் ஒவ்வொருவரும், (சென்ற பதிவில் கூறப்பட்டதைப் போல்) எமக்கேயுரிய தனிப்பட்ட ஆளுமையுடன் தான் வளர்கிறோம். எமது சில நுட்பமான பண்புகள், எமது பௌதீக பெற்றோரை விடவும் பெருமளவில் வேறுபட்டுக் காணப்படும். எனவே அவற்றை இதற்க்கு முன்னமே தான் எங்கோ பெற்றிருக்க வேண்டும். கண்ணாடியானது, எமது பௌதீக உருவம், முகச் சாயல், நிறம் போன்றவற்றை காட்டும். ஆனால் இந்த வெளிப்புற விஷயங்கள் எதனாலும், எமது சுய அடையாளத்தை வெளிப்படுத்திவிட முடியாது. ஏனெனில் நாம் இந்த பௌதீக உடலுக்குள் இருக்கும் கட்புலனாகாத, என்றும் அழிவில்லாத ஆத்மா.

உருவம்: நாம், இந்த பௌதீக உடலிலிருந்து விலகி, சுய அடையாளத்தை தேடத் தொடங்கும் போது, அசாதாரண பற்றற்ற தன்மையையும், நிச்சயமற்ற தன்மையையும் உணருவோம். இது ஏனெனில், நாம் இன்னுமே 'நான் யார்?' என்பதை முற்றாக அறிந்து கொள்ளாமலேயே, இதுகாலவரை எமக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு இடத்தை விட்டு சடுதியாக விலகிவிடுகிறோம். அதாவது இரண்டும்கெட்டான் நிலை. அதனால்,  நாம் இப்போது இன்னும் மேலே ஒரு படி போய் நான் யார் என்பதனை முழுதாக அறிந்து அனுபவம் செய்ய வேண்டும்.  இதற்கு,  முதலில் எம்மை உருவமற்ற, மிக மிக நுண்ணிய, சக்தி மிக்க, பிரகாசமான ஓர் ஒளிப்புள்ளியாகக் கருதுவோம். இப்போது பலதரப்பட்ட எண்ணங்கள் வரும். இது உண்மையாக இருக்க முடியுமா? என்ன ஒரு வினோதமான எண்ணம்? இதுவரை காலமும் என்னை ஓர் ஆணாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ கருதி வந்துவிட்டு இப்போது மிக மிக நுண்ணிய ஒளிப்புள்ளியாக எண்ணுவதென்றால்..? 

இன்னும் சொல்லப் போனால்.. மேலும் பகுக்க முடியாத, மிகவும் நுண்ணிய இந்த சிறிய புள்ளியினுள் தான் அனைத்து சக்திகளும் நிறைந்திருக்கிறது.  இதை பற்றி நாம் எவ்வளவு ஆழமாக எண்ணுகிறோமோ, அந்தளவு நாம், எம்மைப் பற்றிய விழிப்புணர்வை அடைய முடியும்.  

அனுபவம் செய்தல்:  நேரத்தாலும் தூரத்தினாலும் தடைப்படுத்த முடியாத, அழிவற்ற, தனித்துவம் மிக்க சிறிய புள்ளி. எவ்வித கேத்திரகணித பரிமாணமுமற்ற ஓர் புள்ளி. கட்புலனாகாத தூய ஆற்றல். இவ்வாறு எம்மை நினைக்கையில் மிகவும் விசித்திரமாக இருக்கிறதல்லவா? இருந்தும் நாம் இதனை மேற்கொண்டு அனுபவம் செய்து பார்க்கப் போகிறோம். 

அமைவிடம்: எமது ஆத்மாவானது, நெற்றியின் நடுவே புருவ மத்தியில், பௌதீக உடலை கட்டுப்படுத்தும் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்யும் உள்ளுறுப்புகளுக்கு மிக அருகாமையில் இருக்கிறது. இங்கிருந்து அதனால் முழுகட்டுப்பாட்டை கையாள முடிகிறது. 

செயல்திறன்: மூளையானது, மின் அதிர்வுகள் வழி இயங்கும் ஓர் கருவியாகும். ஆத்மாவானது ஒரு தீர்மானத்தினை எடுத்த உடனேயே அத் தீர்மானம், மூளையை அடைகிறது. பின்னர் அது, உடல்தொகுதியினால் செயலாக மாற்றப்படுகிறது. இவ்வாறே, புற தூண்டுதல்களும், ஐம்புலன்கள் வழியாக மூளையை அடைந்து, பின்பு ஆத்மாவை அடைகிறது. இதனாலேயே வெளிக்காரணிகளால் நாம் தூண்டப்படுகையில், பலதரப்பட்ட மேலதிக எண்ணங்களை உருவாக்குவது மட்டுமல்லாது, பல சமயம் அவை செயல்களாகவும் மாற்றம் பெறுகின்றன. இதனைத் தீர்மானிப்பது புத்தியாகும். ஆத்மாவே கட்டுப்படுத்துவரும், மூளையே அதன் கட்டுப்பாட்டு அறையும் ஆகும். 

மூன்றாவது கண்: ஒருகாலத்தில், பௌதீகமாக இருந்ததாகக் கருதப்பட்ட இந்த மூன்றாவது கண், உண்மையில் மெய்யறிவு ஆகும். எனினும் இது பௌதீகமானதல்ல. ஏனெனில் மெய்யறிவு, பௌதீக உடலின் எந்த குறித்த பாகத்துடனும் தொடர்புபட்டதல்ல. ஆத்மாவே மெய்யறிவைத் தேடுகிறது, ஆத்மாவே அதனைத் தக்கவைத்துக் கொள்கிறது. ஆதலால், ஆத்மீக ரீதியில் "மூன்றாவது கண்ணைத் திறத்தல்" என்றால் 'பிரக்ஞையின் விழிப்புணர்வு' அல்லது 'ஆத்ம உணர்வு' என்று அர்த்தமாகும்.

மனிதர்கள் இரவில் பௌதீகக் கண்களினால் பார்க்க முடியாதபோது தடுமாறுகிறார்கள். கண்கள் மனத்தை ஏமாற்றுகிறது. முழுமையான  தகவல்களைப் பெறமுடியாததால் புத்தி தவறான முடிவை எடுக்கிறது. ஞானம் என்பது சூரிய வெளிச்சம் போன்றது. அது மூன்றாவது கண்ணைத் திறக்கையில், இருட்டு உடனடியாகவே அகன்று வெளிச்சம் உண்டாகிறது. இந்த மூன்றாவது கண் திறக்கப்பட்டதும் எமக்கு, நாம் எதைச் செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. நாம் இதுவரை காலமும், எமது இரு பௌதீகக் கண்களை மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறோம். அவற்றால் இந்த பௌதீக பரிமாணங்களைத் தாண்டி பார்க்க முடியாது. ஆனால் எமது மூன்றாவது கண்ணினால் பௌதீக பரிமாணங்களைத் தாண்டிப் பார்க்க முடிவதால், எமக்கு நாமே முழுமையான அதிபதியாக முடிகிறது.  



No comments:

Post a Comment