Saturday, October 25, 2014

ராஜயோக தியானம் : பரமாத்மாவின் பண்புகள்


இந்த பூமியையே காகிதமாகவும், சமுத்திரத்தை மையாகவும், மரங்கள் அனைத்தையும் இறகாகவும் மாற்றினாலுமே இறைவனினது முழு பண்புகளையும், மகிமைகளையும் எழுதிமுடிப்பது சாத்தியமல்ல என்று சொல்லப்படுகிறது. எனினும் சில குறித்த சிறப்பியல்புகளை புரிந்து கொள்வதற்காக, அன்பு, அமைதி, தூய்மை, பேரானந்தம் மற்றும் சக்தி போன்ற குறிப்பிட்ட பண்புகளை எடுத்துக்கொள்வோம். தியானத்தில் எமது எண்ணங்களை பரமாத்மாவிடம் ஒருமுகப்படுத்தும்போது, ஆத்மாவானது பரமாத்மாவின் இந்த குணங்களால் நிரப்பப்டுவதை அனுபவம் செய்யமுடியும். ஆத்மாவானது அவற்றை தனக்குள் உள்வாங்கி இறுதில் முழுவதுமாக மாற்றமடைகிறது.

நாம் இறைவனை அனைத்து ஆத்மாக்களின் தந்தையாக ஏற்கனவே அடையாளம் கண்டுகொண்டோம். ஆனால் அனைத்து தகமைகளையும் தன்னகத்தே கொண்ட ஒளிப்புள்ளியாகிய பரமாத்மாவை தாயாகவும், தந்தையாகவும் அனுபவம் செய்வதும் சாத்தியமே. 'அவன்' என்ற வார்த்தை தந்தைக்குரிய பாத்திரத்தினை மிக அழுத்தமாக பதிந்தாலுமே, ஒரு தாய்க்குரிய அன்பினையும், கருணையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறார். தவிர, பரமாத்மாவிடம் அனைத்து தகமைகளும் காணப்படுவதனால், அவரை பலவிதமான பாத்திரங்களில், உறவுமுறைகளில் அனுபவம் செய்யமுடியும்.

இறைவனுடனான தொடர்பென்பது, அவர் மிகநுண்ணிய ஒளிப்புள்ளி என்ற விழிப்புணர்விலேயே சாத்தியமாகும். மனதை ஒரு பெரும்பரப்பில் ஒருமுகப்படுத்துவதென்பது சாத்தியமற்றது. முழு உருவத்தினையும் காணும்போது, மனமானது, கண் மற்றும் மூளையுடன் இணைந்து, முழு காட்சிகள் கொண்ட ஒரு படத்தொகுப்பையே உருவாக்கி விடுகின்றது. எனவே ஒரு பொருளின் மிகச்சிறிய பாகத்தில் தான் மனதை முழுதாக ஒருமுகப்படுத்த முடியும். பரமாத்மாவுடன் இணைப்பினை அனுபவம் செய்யவிரும்பும் ஓர் ஆத்மா, அவரை மிகச்சிறிய ஒளிப்புள்ளியாக காண்பதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்துவது சாத்தியமாவதுடன் அவருடன் இணைதலையும் அனுபவம்செய்ய முடிகிறது. இதன் மூலம் உறவுமுறை  கட்டியெழுப்பப்படுகிறது.

பரமாத்மாவின் பெயர்: மிக நெருங்கிய தொடர்பிலுள்ள ஒருவரின் பெயரை நாம் அறிந்துவைத்திருப்பது வழமையானதே. உலகத்தில் எத்தனை மொழிகளுண்டோ அத்தனை பெயர்களால் இறைவன் அழைக்கப்படுகிறார். அவை அனைத்தும் ஒரு சிறப்புப் பொருள்கொண்டதாகவோ பண்பை உணர்த்துவதாகவோ இருக்கிறது. ஆனாலுமே "சிவா" என்ற நாமமானது பலபொருள்  கொண்டதாகவும், உலகனைத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது. 'சிவா' (Shiva) என்ற சொல்லுக்கு நன்மையளிப்பவர், புள்ளி மற்றும் விதை என்று மூன்று பிரத்தியேக பொருளுண்டு. 

சிவா என்ற சொல்லிலேயே இறைவனது முக்கிய பண்புகளை எம்மால் காணமுடியும். அவர் நன்மையளிப்பவர், அன்பான தந்தை, மிகச்சிறிய ஒளிநிறைந்த புள்ளி வடிவானவரே விருட்சத்தினது விதையுமாவார். மனித விருட்சத்தினது முழு ஞானத்தினையும் தன்னகத்தே கொண்ட இவ்விதையே அவ்விருட்சத்தின் சிருஷ்டிகர்த்தா ஆகும். இப்பெயரானது கோட்பாடுகள் சார்ந்த விளக்கத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. எனினும் நாம் தியானத்தின்போது 'பாபா' என்ற பெயரை உபயோகிக்கிறோம். இதன் அர்த்தம் தந்தை ஆகும். பாபா என்றவுடன் உடனடியாகவே எமது அன்பான தந்தையுடனான எமது மிக நெருங்கிய உறவுமுறை நினைவுக்குக் கொண்டுவரப்படுகிறது. அதனால் இவரே அசரீரியான, அதிமேலான பரமாத்மா, சிவபாபா.









  

No comments:

Post a Comment