Friday, October 24, 2014

ராஜயோக தியானம்: பரமாத்மாவின் வடிவம்

ஆத்மாவானது மிகச்சிறிய ஒளிப்புள்ளி, மிக நுண்ணிய ஆற்றல் என்பதனை அடையாளம் கண்டு கொண்ட பின்பு, எம்மால் மற்றையவர்களை சகோதரர்களாக பார்க்க முடிகிறது. ஒவ்வோர் ஆத்மாவும் தனித்துவமான அடையாளத்தினை தன்னகத்தே கொண்டது, ஒவ்வொன்றும் வெறுவேறான, வித்தியாசமான அனுபவங்களின் பதிவுகளைக் கொண்டுள்ளது. தனித்துவமான புத்தியையும், குறிப்பிட்ட அலைநீளத்தில் செயல்படும் மனத்தினையும் கொண்டுள்ளபோதிலும் ஒவ்வோர் ஆத்மாவும் ஒரே அளவு மற்றும் வடிவத்தினை கொண்ட மிகச்சிறிய ஒளிப்புள்ளிகளாகும். எனவே அனைத்து ஆத்மாக்களின் தந்தையும் இதே வடிவத்தினைக் கொண்டிருப்பதும் சாத்தியமே.  பரமாத்மாவும் கூட மனம், புத்தி, சம்ஸ்காரம் ஆகியவற்றினைக் கொண்டிருக்கக் கூடிய தனித்துவம் வாய்ந்த ஓர் மிக நுண்ணிய ஒளிப்புள்ளியான ஆத்மாவே.

இறைவன் என்பவர் சக்தியின் வடிவமாக பல இடங்களில் கருதப்பட்டு வந்தபோதிலும், எம்மால் உறவுமுறை வைத்திருக்கக் கூடிய தனித்தன்மை மிக்க ஒருவராக கருதுவது சற்றே விசித்திரமானதே. சம்ஸ்காரம் என்றால் என்ன? ஆளுமை என்றால் என்ன? அவை செயல்களின் பதிவாகும். இறைவனானவர் நன்மை பயக்கும் செயல்களை செய்பவர் என்று நினைவுகூரப்படுகிறார். எனவே பரமாத்மாவினது சம்ஸ்காரங்களில் நன்மை உள்ளது. அவர் மெய்ஞானக் கடல் என்றும் நினைவுகூரப்படுகிறார். அனைத்து ஞானமும் அவரது புத்தியிலே இருக்கிறது. பரமாத்மாவின் புத்தியானது எல்லையில்லாதது. முழுமையான விழிப்புணர்வையும், மெய்ஞானத்தினையும் கொண்டது. பராமாத்மாவுக்கு மனம் இருக்கிறது. அவரே எல்லையற்ற அன்பினையும், அமைதியையும், கருணையினையும் கொண்டவராக அறியப்படுகிறார்.

இறைவனானவர் மிகமிக நுண்ணிய ஒளிப்புள்ளி என்ற கருத்தானது, இதுவரை அவரைப்பற்றி இருந்த முடிவற்றவர், எல்லையற்றவர் என்ற  கருத்துக்களிலிருந்து சற்றே வேறுபட்டதாகும்.  அளவிடப்பட முடியாத மிகப்பெரிதையே 'எல்லையற்றது' என்று கருதப்படுவதாக நினைக்கின்றனர். இருந்தும்  பௌதீக, கேத்திரகணித அளவியல் முறைகளுக்கு அப்பாற்பட்ட மிகமிக நுண்ணிய, அளவிடப்பட முடியாத ஒன்றைக் கூட இவ்வாறு சொல்ல முடியும். எனவே பரமாத்மாவின் வடிவம், எல்லையற்ற மிகப்பெரியது என்பதைவிட, அளவிடப்பட முடியாத மிக நுண்ணியது என்பதே மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

இறைவனின் பண்புகள் எல்லையற்றவை என கேள்விப்பட்டிருக்கிறோம். அதனாலேயே அவரின் வடிவத்தினையுமே எல்லையற்ற மிகவும் பெரியவர் என தீர்மானித்துவிட்டோம். ஆனால் வடிவத்துக்கும், பண்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. மனிதர்களின் உருவத்தினை வைத்து அவர்களின் பண்புகளை நாம் தீர்மானிப்பதில்லை. அதேபோல் ஆத்மாவினது சக்திக்கும், பௌதீக பரிமாணங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. நாம் ஆத்மாவை மிகச்சிறிய ஒளிப்புள்ளியாக ஏற்கனவே அடையாளம் கண்டுவிட்டோம். இப்போது பரமாத்மாவையும் மிகச்சிறிய ஒளிப்புள்ளியாக கருதியவாறே, அச்சிறிய புள்ளியிலிருந்து எல்லையற்ற அன்பு, அமைதி, தூய்மை, பேரானந்தம், சக்தி போன்ற எல்லையற்ற திவ்ய பண்புகள் கதிர்பரப்புவதை காணலாம்.


இச்சிறிய ஒளிப்புள்ளியிலிருந்து ஒளியானது, தீபங்களிலிருந்து உருவாகும் ஒளியினைப்போல் நீள்வட்டவடிவில் பரவுகிறது. உலகம் முழுவதிலும், இறைவனானவர் ஒளிவடிவமாக, பெரும்பாலும் இத்தகைய நீள்வட்ட வடிவத்தில் நினைவுகூரப்படுகிறார். இந்த உருவம் பிற்பாடு வழிபடும் பொருட்டு, கண்ணுக்குப் புலப்படக்கூடியவாறு பெரிதாக பொன்னாலும், வெள்ளியாலும், வைரத்தினாலும் ஏன் பனிக்கட்டியினாலும் கூட உருவாக்கப்பட்டுள்ளது. உருவ வழிபாடற்ற இஸ்லாத்திலும் கூட இதேபோன்ற நீள்வட்ட வடிவான கரியநிறக் கல்லொன்று மக்காவில் வைக்கப்பட்டுள்ளது. இது (al-Ḥajar al-Aswad) புனித கல் என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானிலுள்ள பௌத்தத்தின் ஒருபிரிவினர், தியானத்தில் தமது எண்ணங்களை, அமைதியை அளிப்பவர் என்று அறியப்படும் ஒரு நீள்வட்ட வடிவ உருவத்தின்மீது குவியப்படுத்துகின்றனர்.  பர்சிகளின் தீர்கதரிசியான Zoroaster, நெருப்பினை இறைவனின், அதிமேன்மையான ஒளியின் ஞாபகார்த்தமாக வழிபட பரிந்துரைத்தார். யேசுவும் இறைவனை ஒளியாக குறிப்பிட்டுள்ளார். மோசஸ், பற்றை எரிவது போலவும், ஒளி தோன்றுவதாகவும் காட்சிகள் கண்டிருக்கிறார். சீக்கிய மதத்தின் ஸ்தாபகரான குரு நானக், இறைவன் ஒன்றே எனவும் அவரை உடலற்றவராக, மனித உருவமற்றவராக குறிப்பிட்டிருக்கிறார்.  எனவே நிச்சயமாக இந்த வடிவத்திலேயே இறைவனானவர் உலகனைத்திலும் நினைவுகூரப்பட்டிருக்கிறார். 







No comments:

Post a Comment