Friday, October 17, 2014

ராஜயோக தியானம்: ஆத்ம உணர்வின் முதல் படிநிலை

எமது தற்போதைய நிலை பற்றி, சென்ற பதிவில்  பார்த்தோம். இது நிச்சயமாக விரும்பத் தகாத ஒன்றாக இருப்பினும் அதுவே பலரின் இன்றைய நிலையாகும். ஆனால் எமது நிலை அத்தகையதாக இருக்கவேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையை மாற்றுவதற்கு முதலாவதாக, தீர்மானிக்கும் சக்தியான புத்தியை விழிப்படையச் செய்யவேண்டும். இது மிகவும் சுலபமானது.

ஒரு கட்டுக்கடங்காத குதிரை: நான் ஓர் ஆத்மா என்ற விழிப்புணர்வின் மூலம், இப்போது இந்த உலகில் எமது உண்மையான நிலையை உணர முடிகிறது. இந்த விழிப்புணர்வு நிலையில், எமது எண்ணங்களை கட்டுப்படுத்துவதும், மனதை ஒழுங்கமைப்பதும் எமது கடமை என்பதை உணர்கிறோம். மனமானது மகத்தான ஆற்றல் மிக்க கட்டுக்கடங்காத குதிரைக்கு ஒப்பிடப்படுகிறது. அது ஒருபோதும் நிற்காமல் சுற்றி சுற்றி ஓடிக்கொண்டேயிருக்கிறது. இரவு பகலாக ஓடுகிறது. கனவுகளில் கூட நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதனால் அது களைத்துவிட்டதோ என்று கூட சிறிது ஆச்சரியமாக இருக்கும். ஆனால் தன்னை எப்படி அமைதிப் படுத்திக் கொள்வது என்று அதற்குத் தெரியாது. சற்று அமர்ந்திருப்பதன் மூலம் எமது உடலுக்கு சிறிது ஓய்வு கொடுக்க முடியும். ஆனால் மனமானது அமைதியடைய மறுக்கும். அதற்கு எப்பொழுதும் ஓடிக்கொண்டிருக்கத்தான் தெரியும். ஆனால் எத்திசையில் ஓடுவது என்று கூடத்தெரியாது. 

உணர்தல்: நான் இந்த பௌதீக உடலல்ல, அதனுள் இருக்கும் சக்திமிக்க ஆற்றல் என்பதை உணர்ந்த கணமே, அச்சக்தியை என்னால் உபயோகிக்க முடிகிறது. இந்த விழிப்புணர்வின் மூலம், கட்டுக்கடங்காத குதிரையாகிய எமது எண்ணங்ககளை வழிக்குக் கொண்டுவரும் கடிவாளம் எமது கைக்கு வருகிறது. எண்ண அலைகளின் விழிப்புணர்வின் மூலம் அவற்றின் ஓட்டத்தினை வழிப்படுத்த முடிகிறது. இதனால் இதுவரை எம்மை களைப்புறச் செய்த, சக்திகளின் வீண்விரயம் தவிர்க்கப்படுகிறது. 

தெரிவுசெய்தல்: நாம் இப்போது எமது ஆசைகளின் மீது தேர்வுசெய்யும் அதிகாரம் உள்ளவர் ஆகிவிட்டதனால், தற்காலிக இன்பங்களைத் தரும் எண்ணங்களையல்லாமல், நிரந்தர சந்தோசத்தை அளிக்ககூடிய எண்ணங்களை மட்டும் தெரிவுசெய்ய முடிகிறது. தூய்மையான எண்ணங்களை மட்டுமே செயல்களாக அனுமதிப்பதனால், இதுகாலவரை எமது கவலைகளுக்குக் காரணமான தூய்மையற்ற சம்ஸ்காரங்கள் பலவீனமாகி, தூய்மையான சம்ஸ்காரங்களுக்கு வழி விடுகின்றன. இதன் மூலம், சதா பதட்டமான, ஏக்கம் நிறைந்த எண்ணங்களுக்குப் பதிலாக அமைதியான, திட்டமிடப்பட்ட எண்ணங்களை மட்டுமே எப்போதும் கொண்டிருக்கும் நிலையை அடையமுடியும். 

விளைவு: ஆரம்பத்தில் மனத்தின் மீது நன்கு திட்டமிடப்பட்ட கட்டுப்பாடு அவசியமாக இருப்பினும், இதுவே முழுதான சுயமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. எனவே இது வெறுமனே வெளியிலிருந்து திணிக்கப்பட்ட சக்தியோ அல்லது ஒழுக்கக் கோட்பாடுகளோ அல்ல. அவற்றால் எமது சுபாவம் மற்றும் நடத்தைகளே மேன்மையானதாக்கப்படுகின்றன. பின்னர் ஒரு கட்டத்தில், தூய்மையானதும் மேன்மையானதுமான சந்தோசத்தினை தரக்கூடிய எண்ணங்களை மட்டுமே கொண்டிருக்ககூடிய நிலையை அடைகையில், எம்மால் பிறருக்கும் சந்தோசத்தினை கொடுக்க முடியும்.

எமது புத்தியின் விழிப்புணர்வால், ஒவ்வொரு எண்ணங்களும் மதிப்பீடு செய்யப்படுவதனால் தவறுகள் ஏற்பட முன்னரே அவை தவிர்க்கப் படுகின்றன. இதனால் எமது வாழ்வில், முன்னர் சாத்தியமில்லாததாகக் கருதப்பட்ட பல மாற்றங்கள் இலகுவில் சாத்தியமாகிறது. 

சம்ஸ்காரங்களை உருவாக்குதல்: பலகாலமாக சரீர உணர்விலேயே இருந்து விட்டதனால், 'நான் ஓர் ஆத்மா' என்ற எண்ணம் அடிக்கடி மறந்து விடுகிறது. முயற்சியால் மட்டுமே இந்த விழிப்புணர்வை தக்க வைத்துக்கொள்ள முடியும். எனவே எமக்கு நாமே கற்பித்துக்கொள்ளும் சம்ஸ்காரத்தினை முதலில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். எம்மைச் சுற்றியுள்ளவர்கள் எம்மை இந்த உடலாகவே பார்த்தாலும், நாம் இந்த உடல்தான் என்று சொன்னாலுமே, "நான் ஓர் அமைதியான, கட்புலனாகாத, அழிவற்ற ஆத்மா, இந்த உடலை வெறுமனே ஒரு கருவியாக உபயோகப்படுத்துகிறேன்." என்று எமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டும். இந்த மனப்பாங்கில் நிலைத்திருக்கும்வரை, நாம் முழு சுதந்திரத்தினை கொண்டிருப்போம். எமது செயல்களும் சரியானவையாகவும், சாதகமானவையாகவும் இருக்கும். 

பிறரைப் பார்க்கும்போதும், அவர்களை ஆத்மாக்களாக, சகோதரர்களாக பார்ப்பதனால், ஆளுமை மோதல்களின் விவரண குறுக்கீடுகள் எதுவுமற்ற தூய அன்பு மற்றும் நல்லிணக்கத்துடன் கூடிய உறவுமுறைகள் உருவாகின்றன. அவர்களை ஆண், பெண் என்று பௌதீகமாக பாராது, என்னைப் போலவே அவர்களும் ஆத்மாக்கள், பௌதீகமல்லாதவர்கள் என்று பார்க்கும் போதே இது சாத்தியமாகிறது. 

ஆத்ம உணர்வு நிலை என்பது: நான் ஆத்மா என்ற விழிப்புணர்விலிருந்து எனது கருவியான இந்த சரீரத்தினை விவேகத்துடன் உபயோகித்தாலும், அனைத்தையும் மூன்றாவது கண்ணாகிய ஞானக்கண்ணினைக் கொண்டு பார்த்தலுமேயாகும்.







No comments:

Post a Comment