Tuesday, October 21, 2014

தீபாவளி

தீபாவளி: எனது சொந்த 'ஆத்மீக விழிப்புணர்வு' என்ற விளக்கினை ஏற்றுதல்.

தீயசக்திகளை அழித்து அமைதியினையும் சந்தோசத்தினையும் ஏற்படுத்துவதை விளக்கும் தீபத் திருநாட்கள் அனேகமாக அனைத்து சமூகங்களிலும் காணப்படுகின்றது. தீபாவளி என்றவுடன் உடனடியாகவே மனதில் தோன்றுவது, இனிப்புகள், புதிய ஆடைகள், கணக்குவழக்கு புத்தகங்கள், இலக்ஷ்மிதேவி, வானவேடிக்கை போன்றவைகளே.. மகாராஷ்ட்ராவில் இது ஐந்து நாட்கள் சிறப்பு விழாவாக கொண்டாடப்படுகிறது. என்னதான் பௌதீக சடங்குகள் அவசியமாக இருப்பினும், அவற்றையும் தாண்டி ஆழமான ஆன்மீக அர்த்தத்தினையும் அறிந்திருப்பது, அவற்றின் மீதான மதிப்பினை தக்கவைத்து அதன்படி வாழ வழிவகுக்கும். 

நாம் இத்தகைய மங்களகரமான நாட்களை கடந்த காலங்களைப் போலவே மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடுகின்ற போதிலும், எமது முன்னோர்களிடம் காணப்பட்ட தூய நம்பிக்கைகள் அதிக தெளிவூட்டுபவையாக இருந்தன. 

தீபாவளி என்பது தீய சக்திகள் மீதான வெற்றியை குறிக்கிறது. ஆனால் இதை மேலும் நன்கு ஆராய்ந்து பார்த்தோமானால், எந்த இருளினை அல்லது தீய சக்திகளை நாம் நீக்கப் போகிறோம்? உண்மையில் தீயசக்திகளுக்கோ அல்லது இருளுக்கோ என்று சொந்தமாக வடிவமோ அடையாளமோ இல்லை. மாறாக அவை, நற்குணங்கள் அல்லது ஒளியின் பற்றாக்குறையே ஆகும். 

முதல் நாள் (Dhanamyodashi) : இது தன்வந்திரியை வழிபடுவதில் தொடங்குகிறது. தன்வந்திரி என்பது அனைத்து நோயினையும் குணமாக்ககூடிய ஒருவித ஆயுள்வேத மூலிகையாகும். மனிதனுக்கு ஏற்படும் நோய்களில் 98% ஆனவை உளவியல் சம்பந்தப்பட்டவை, அதாவது பிரச்சினை மனதில் தான் என்று விஞ்ஞானம் கூட நிரூபித்திருக்கிறது. காலம் மற்றும் சந்தர்ப்பங்களால் மனிதன் தனது உள்ளார்ந்த சக்தியின் பெரும் பகுதியை இழந்துவிட்டான். இதன் காரணமாக காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் போன்ற விகாரங்களினால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவன் ஆகிவிட்டான். பலவீனமுற்ற மனமானது, உடலையும் பாதித்துவிட்டது. தற்போது தன்வந்த்ரியாகிய இறைவனால் பரிந்துரைக்கப்பட்ட ஆத்மீக ஞானம் எனும் மாத்திரைகளை உட்கொள்வதனால், மனதையும் உடலையும் குணமாக்கிக்கொள்ள முடியும்.

இரண்டாவது நாள் (Narkchaturdashi) : தன்னைஉணர்தல் மற்றும் இறைவனை உணர்தல் பற்றிய ஆன்மீக அறிவானது இறைவனால் மட்டுமே கொடுக்கப்பட முடியும். தீபாவளியில் விளக்கேற்றும் பாரம்பரியமானது, இறைவன் எவ்வாறு வந்து எம்மிடம் நாங்கள் ஆத்மாக்கள் என்ற விழிப்புணர்வை பற்றவைக்கிறார் என்பதை குறிக்கிறது. இந்த ஞானத்தின் உதவிகொண்டு விகாரங்களை வெல்ல முடிகிறது. இதன் ஞாபகார்த்தமே, நரகாசுரவதம் அல்லது தீயசக்திகளை அழித்தல் ஆகும். 

மூன்றாவது நாள் : இந்நாள் இலட்சுமிதேவியை வரவழைப்பதில் செலவிடப்படுகிறது. தற்காலத்தில் நாம் இலஷ்மிதேவியின் நிலையை மிகவும் தாழ்த்தி ஒரு வங்கியாளராக ஆக்கிவிட்டோம். உண்மையில் அவரது பெயரில் 'லக்க்ஷ்' என்றால் இலக்கு ஆகும். எனவே அவரது நிலையே, நாம் அனைவரும் அடையவேண்டிய இறுதி இலக்காகிய பரிபூரண நிலையாகும். தெய்வீக ஞானமும், நற்குணங்களுமே அவர் வழங்கும் செல்வங்களாகும். நன்னடத்தையுடையவர் ஒருவரால் மட்டுமே செழிப்பினையும், அமைதியினையும் அடைய முடியும். இலஷ்மியின் வருகைக்காக வீடுகள் அனைத்தும் தூய்மையாக்கப்படுகின்றன. இருந்தும் மனதையும் புத்தியையும் தூய்மையாக வைத்திருத்தலே அவரை ஈர்க்கக்கூட்டிய இலகுவான வழி என்பதை நாம் மறந்துவிட்டோம். 

நான்காவது நாள் (Balipratipada) : பரமாத்மாவின் நினைவில் இருந்து செய்யும் ஒவ்வொரு செயலிலும் நாம் வெற்றி காண்போம். ஆத்மீகத்தில் இதுவே யோகம் அல்லது இணைப்பு என்பதை குறிக்கிறது. எம்மை ஒளிப்புள்ளியாக நினைத்து, எமது புத்தியையும் எண்ணங்களையும் பரம தந்தையான இறைவனிடம் வழிப்படுத்தும்போது அவரது அன்பினையும் சக்தியையும் அனுபவம் செய்ய முடியும். இச் சக்தி கொண்டு எமது பலவீனங்களை அழித்து  நற்குணங்களை பதியவைக்க முடியும். 

ஞானத்தினை பெறுதல் -> விகாரங்களிருந்து விடுபடுதல் -> புத்தியினை தூய்மையாக்குதல் -> பரமாத்மாவை நினைவில்கொள்ளுதல் என்ற இந்த அழகான படிமுறை ஐந்தாவது நாளை போற்றுவதற்கு வழிவகுக்கிறது. 

ஐந்தாவது நாள் (Bhaiyadooj) : ஆத்மாவைப்பற்றிய இந்த தனித்துவம் வாய்ந்த ஞானத்தின் மூலமாக, இதுவரை காலமும் கொண்டிருந்த இனம், மதம், நிறம், பால், வயது போன்ற பாரபட்சம் மிக்க குறுகிய எண்ணங்களிலிருந்து விடுபட முடிகிறது. இதனால் நாம் ஒவ்வொருவரையும் தனிப்பட்டவர்களாக, எமது ஆன்மீகக் குடும்பத்தில் இருக்கும், கடவுளின் குழந்தைகளாக பார்க்க முடிகிறது. இதுவே இறுதியான உண்மையாகும். 

இனிப்புகள் (அன்பான உறவுமுறைகளை பேணுதல்)
புதிய ஆடைகள் (பழையனவற்றை கைவிடுதல்)
புதிய கணக்கு புத்தகம் (கர்ம கணக்குகளை தீர்த்தல்)
வாணவேடிக்கை (தீய சக்திகளை எரித்தல்)
மற்றும் பிற சடங்குகள் பிறக்கவிருக்கும் புதிய ஆண்டை அல்லது யுகத்தினை வரவேற்பதாக அமைகிறது. அறியாமையின் இருளானது தொடர்ந்து இருக்க முடியாது. புதிய சந்தோஷ உலகத்தினை உருவாக்கும் அனைவரது மிக ஆழமான ஆசையும் நிஜமாகும்.

ஒரு தீபத்தினை (எமது ஆத்மீக விழிப்புணர்வு) ஒளியேற்றுவதன் மூலம், அதன் ஒளியினால் பிற தீபங்களையும் (பிறரையும்) இலகுவில் ஒளியேற்ற முடிகிறது. 












No comments:

Post a Comment