Monday, October 13, 2014

ராஜயோக தியானம்: ஆத்மா எவ்வாறு இயங்குகிறது?


நான் யார் என்பதனை மறந்துவிடுவதனால் ஏற்படும் பாதிப்புகளை நிறையவே, கண்டும், கேட்டும் உணர்ந்தும் விட்டோம். இப்போது, இந்த மிக மிகச் சிறிய புள்ளிக்குள், பிரக்ஞை சிறுபொறிக்குள் அப்படி என்னதான் நடக்கிறது என்று சற்றே ஆராய்ந்து பார்ப்போம்.  ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் மூன்று வேறுபட்ட சக்திகள் காணப்படுகின்றன. அவற்றை அறிந்து கொள்ளும் போது, இதுவரை இந்த புரிந்துணர்வு இல்லாத காரணத்தினால் எத்தனை விபத்துக்கள் நடந்தன என்பது மட்டுமல்லாது, அவற்றின் மீதான கட்டுப்பாட்டை எவ்வாறு மீளவும் பெற்றுக்கொள்வது என்பது பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

மனம், புத்தி, மற்றும் சம்ஸ்காரம் என இந்த மூன்று சக்திகளும் வேறுவேறான பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டாலுமே, அவை அனைத்துமே வேறுவேறு படிநிலைகளில் இயங்கும் ஒரே ஆற்றலாகும். 

மனம்: மனம் மூலமாக ஒருவர் சிந்திக்கிறார், கற்பனை செய்கிறார், திட்டங்களை உருவாக்குகிறார். எமது எண்ணங்கள் மனதிலேயே உருவாக்கப்படுகின்றன. எண்ணங்களின் உருவாக்கமே உணர்ச்சிகள், ஆசைகள், உணர்வுகள் ஆகியவற்றிற்கு அடிப்படையாகிறது. மனம் மூலமாக எண்ணங்கள் எவ்விடத்தையும் அடைய முடியும். அத்துடன் பழைய அனுபவம் ஒன்றை திரும்பவும் மீட்டி அதன் மூலம் சந்தோசத்தையோ துன்பத்தையோ உருவாக்க முடியும்.  மனமானது ஆத்மாவின் ஓர் பாகம். இதனை இரத்த சுற்றோட்டத்திற்க்குப் பொறுப்பான பௌதீக அங்கமான இதயத்துடன் குழப்பிக்கொள்ளலாகாது.

புத்தி: புத்தியானது எண்ணங்களை மதிப்பீடு செய்வதற்கு பயன்படுகிறது. புரிந்து கொள்கிறது. எமது புரிந்துகொள்ளும் திறனே, அனேகமாக எல்லாவற்றையும் விட அதி முக்கியத்துவம் வாய்ந்த திறனாகும். எமது புத்தியை விரிவாக்குவது மற்றும் ஆழமாக்குவதன் மூலம் எதைப்பற்றியும் தெளிவான புரிந்துணர்வு சாத்தியமாகிறது. 

புத்தியானது, புரிந்துகொள்ளுவது மட்டுமல்லாது காரணப்படுத்துகிறது, நினைவில் வைத்திருகிறது, பகுத்தறிகிறது மற்றும் தீர்மானங்களையும் எடுக்கிறது.  ஆத்மாவின் மற்றைய சக்திகளைப் போலவே இதுவும் மிகவும் சூட்சுமமானது, பௌதீகமானதல்ல. எனவே பௌதீக அங்கமான மூளையுடன் இதனைக் குழப்பிக்கொள்ளலாகாது. மூளையானது, வெறுமனே நரம்பியல் தொகுதியின் பௌதீக கட்டுப்பாட்டு மையமாகும். ஆத்மாவே கட்டுப்படுத்துபவரார். இந்த கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் ஆத்மா, பௌதீக உடலின் அனைத்து பாகங்களினதும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது. புறச் சூழ்நிலை ஒன்றிற்கு மிகவும் களிப்படைவதா அல்லது வருத்தமடைவதா என்ற எனது தீர்மானத்தின் மூலம் ஆத்மாவால் உடலின் இதயத்துடிப்பு மற்றும் சுவாச வேகங்களை மாற்றியமைக்க முடிகிறது. எனவே புத்தியானது பௌதீக உடலின் ஓர் பகுதியல்ல, ஆத்மாவின் சூட்சும பகுதியான தீர்மானிக்கும், புரிந்துகொள்ளும் சக்தியாகும்.

சம்ஸ்காரம்:  செய்து முடிக்கப்பட்ட எந்த ஒரு செயலுமே ஆத்மாவில் ஓர் பதிவை விட்டுச்செல்கிறது. இந்த பதிவுகளையே நாம் சம்ஸ்காரம் என்று குறிப்பிடுகிறோம். பழக்க வழக்கங்கள், மனோநிலை, ஆளுமை பண்புக்கூறுகள், உணர்ச்சிவசப்படும்தன்மை  போன்றவையெல்லாம், ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட பல்வேறு செயல்கள் மூலம், ஆத்மாவில் பதிக்கப்பட்டிருக்கும் சம்ஸ்காரங்கள் ஆகும். எமது மனதில் உருவாகும் எண்ணங்கள் அனைத்தும் இந்த சமஸ்காரங்களின் விளைவுகளே. எனவேதான், ஆத்மாவின் அடிப்படையான அம்சமான எமது ஆளுமையை இந்த சம்ஸ்காரங்களே தீர்மானிக்கின்றன.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், ஒரு புதிய சம்ஸ்காரத்தினை உருவாக்குகிறது. இவ்வாறே ஓர் பழக்கம் தொடங்குகிறது. அதுவே, திரும்பவும் செய்யப்படும் ஓர் செயலாயின், அது ஏற்கனவே பதியப்பட்டுள்ள ஒரு சம்ஸ்காரத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இவற்றின் மூலம், சம்ஸ்காரம் என்பது நாம் இதுவரை மனதாலும் உடலாலும் செய்த செயல்களின்  முழுமையான பதிவு, அதாவது அனுபவங்களின் தொகுப்பு என்பதனைப் புரிந்து கொள்ளலாம். 


No comments:

Post a Comment